முதல்பக்கம்அறிமுகம்கவிச்சோலைகட்டுரைகள்சிறுகதைகள்படித்துச்சுவைத்தவைசைவமும் தமிழும்

குறளும் நிகழ்வும்கணினிக்கட்டுரைகள்மென்பொருள்யுனிகோட் கட்டுரைகள்நிகழ்வுகள்உங்கள் எண்ணங்கள்



 
 
விடைபெறும் நேரம்..... ஒரு ஈழப்போராளியின் கடிதம்
 
நண்பர்களே...
வாழத் துடித்த ஒரு மானுடக் கூட்டத்தின் பிரதிநிதிகளாய் நாங்கள் உங்களுக்கு அறிமுகமானோம். '77ஆம் ஆண்டு ஆகஸ்டு கலவரம் தமிழகத் தேசிய சக்திகளை, எம்மீது அனுதாபம் கொள்ளச் செய்தது. இந்திய உபகண்டப் பிரச்சினைகளில் ஈழப் பிரச்சனையும் பின்னிப் பிணைந்திருப்பதனால், இந்தியாவின் முக்கியத்துவத்தை உணர்ந்து எமது போராட்டத்திற்கு பின் தளமாய் இந்தியாவைக் கொள்ள நாம் எண்ணம் கொண்டோம். இந்தியாவின் உள்ளக முரண்பாடுகள் எம்மைப் பாதிக்கா வண்ணம் அவர்களின் உதவியை, ஆதரவை வகையாகப் பயன்படுத்தத் திட்டமிட்டோம். '77இன் இலங்கைக் கலவரம் எம்மை இத்தீர்மானத்திற்கு உந்தித் தள்ளியது. அவ்வேளையில் தொடக்கக் கால ஈழப் போராளிகள், தேசிய சக்திகளுடன் தம்மை அடையாளப்படுத்தியிருந்தனர். பரவலான அபிப்பிராயத்தை அவ்வேளையில் பெற்றிருக்கவில்லை.

'77இன் பின்னால் ஈழத் தேசிய இனப் போராட்டத்தின் தீர்மான சக்தியாய் தமிழீழ விடுதலைப் புலிகள் தம்மை அடையாளப்படுத்தி, உருப்பெறத் தொடங்கியிருந்தனர். இவ்வேளையிலேயே நாங்கள் இங்கு அறிவுஜீவிகள் மத்தியில் எம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம். ஈழப் போராட்டத்தின் தத்துவ வேறுபாட்டை, உள் முரண்பாடுகளை, சிக்கல்களை, சரியான திசையை நாம் புரியவைத்தோம். தமிழக அறிவு ஜீவிகளில் சிலர் எம்மைப் புரிந்து கொண்டனர். 'தமிழக ஈழ நட்புறவுக் கழகமாய்' 1977 இல் தம்மை அமைப்பு வடிவத்திற்கு உட்படுத்திக் கொண்டனர். இக்கழகமே ஈழப் போராட்டத்தின் ஆதரவாளர்களை அமைப்பு வடிவமாகக் கொண்ட முதல் ஆதரவாளர் அமைப்பாகும். இவ்வமைப்பு மாதாந்தக் கூட்டங்களை நடத்தியது. எம்முடன் அரசியல் உறவுடன் அல்லாது, எமது இலக்கியம், கலை, சமூக இயல், வரலாறு இவற்றுடனும் உறவு கொண்டது. சிறு வெளியீடுகளை வெளிக் கொணர்ந்தது. 'இலங்கையில் ஈழம்' என்னும் சிறு நூல் அவ்வேளையில் ஈழப் போராட்டத்தை, அதன் வரலாற்றை புதிய கோணத்தில் அறிமுகப்படுத்தியது. தமிழீழத் தேசிய சக்திகள் தம்மை தமிழகத் தேசிய சக்திகளுடன், அவற்றைப் பிரதிபலித்த கட்சிகளுடன் தம்மை நெருக்கமாய் அடையாளப்படுத்திக் கொண்டன. 

ஒவ்வொரு தமிழகக் கட்சிகளும் ஒவ்வொரு தமிழீழ இயக்கங்களை ஞானக் குழந்தைகளாக சுவீகரித்துக் கொண்டன. நாம் இவற்றில் இருந்து ஒதுங்கி, பார்வையாளர்களாய் இருந்ததுடன் தமிழகத்தின் முற்போக்காளர்களிடம் எம்மை அடையாளப் படுத்தினோம். அவர்களிடம் நண்பர்களாய் உறவு கொண்டோம்; தோழமை வளர்த்துக் கொண்டோம்; கருத்துக்களைப் பறிமாறிக் கொண்டோம்; விவாதித்தோம். தாயகத் தமிழன், சேயகத் தமிழன் என்ற மனப்பாங்குடன் நாம் உறவு கொள்ளவில்லை. நாம் இருவரும் மனித நேயத்தையே உயர்த்திப் பிடித்தோம். மனித குலத்தை துன்பங்களுப், துயரங்களும் சூழுகையில் துன்பப்பட்டோம்; எதிர்கொள்ளும் பக்குவம் பெற்றோம்; ஆற்றலை வளர்த்தோம். உலகெங்கும் ஆன அடக்குமுறைகளை எதிர் கொள்ளும் ஒவ்வொரு போராளியையும், தோழனையும் நினைவு கொண்டோம். அவர்கள் உணர்வுகளுடன் இறுக்கமானோம். அப் போராளிகளின் வெற்றிகள் எமக்கு உற்சாகமூட்டின. அவர்களுடைய அனுபவங்களை நாம் உள்வாங்கிக் கொண்டோம்.
எங்களுக்கும் இந்தியாவிற்குமான, குறிப்பாகத் தமிழகத்திற்குமான உறவு இப்படித்தான் இருந்தது. அறிவு ஜீவிகளுடன் ஆரம்பித்த எமது உறவு, இலக்கிய அமைப்புகள், பெரியாரின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டவர்கள் என விரிவடையத் தொடங்கியது. அப்போது நாம் 'லங்கா ராணி' என்ற நாவலை வெளியிட்டோம்.
இந்நூல் எமக்குப் பரவலான தொடர்புகளைப் பெற்றுத் தந்தது. எமது வெளியீடுகளை அனுப்பிக் கொண்டிருந்தோம். கருத்துக்களில் இணைந்தோம். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலை இலக்கியவாதிகள், டாக்டர்கள், இளம் வக்கீல்கள், முற்போக்கு எண்ணம் கொண்ட இளைஞர்கள், பல்லவன் பேருந்து ஊழியர்கள், பேச்சாளர்கள், மாணவர் அமைப்பினர், இளைஞர் அணியினர், சிற்றூழியர்கள், ஆலைத் தொழிலாளிகள், இப்படிப் பல மட்டங்களில் தொடர்புகள் இறுக்கமாகின. இவற்றை விடவும் கிராமப் புறத்து விவசாயிகள், இளைஞர்கள் கரையோர மீன் பிடித் தொழிலாளர்களும் எம்மீது அன்பு கொண்டிருந்தனர். இவர்களுடன் கழிந்த எமது பொழுதுகள் இனிமையானவை. 

சென்னை நகரில், கூவம் நதிக்கரையும், பக்கிங்காம் கால்வாய்க் கரையும் நாம் வாழ்ந்த பகுதிகளாய் இருந்தன. குடிசை மாற்று வாரியக் குடியிருப்புக்களே எமது வதியிடங்களாய் இருந்தன. இந்த மக்களிடம்தான் நாம் தமிழகத்தின் ஆத்மாவை, மனிததத்துவத்தை தரிசித்தோம். நாங்கள் அழுகையில் அவர்களும் அழுதார்கள்; நாங்கள் சிரிக்கையில் அவர்களும் சிரித்தார்கள்; எம்முடன் அவர்கள் பட்டினி கிடந்தனர். எமது பெரும்பாலான சாப்பாட்டுப் பொழுதுகள் இவர்களது இல்லங்களிலேயே நிகழ்ந்தன. ஒருவர் முதுகின் மேல் ஒருவர் ஏறி நின்று சுவரொட்டி ஓட்டினோம். எங்களுக்கு அவசியமான நேரங்களில் இவர்கள் கடன்பட்டனர். நாம் முன்னேறிச் செல்வதில் இவர்கள் ஆர்வம் காட்டினர்; உற்சாகம் தந்தனர். சிறந்த நண்பர்களை நாம் இங்கு பெற்றிருக்கிறோம். மாறிய சூழ்நிலையில் இன்று "ஈழ நண்பர் கழகம்" மூலம் நாம் பரந்த உறவைப் பெற்றிருக்கிறோம். கொடிய பசி வேளைகளில், வெளியில் கொடுமையில் அலைந்து திரிகையில், எத்தனைக் குடும்பங்கள் எங்களை அரவணைத்தன! முகமலர்ச்சியுடன், விருந்தோம்பும் உணர்வுடன் எங்கள் கவலைகளை, சோகங்களை, கோபங்களை வருடிக் கொடுத்தனர்; நாங்கள் அவர்களைத் தாயாய், தந்தையாய், தோழராய், உறவினர்களாய் மதித்தோம்.

இன்னும் புலராத எங்களின் இந்தப் பொழுதிலும், எத்தனையோ நினைவுகள் குமிழிடுகின்றன. தமிழகத்தின் மாவட்டம் தோறும் நடைபெறும் மாநாடுகளின் பந்தல்களின் கீழ் நாங்கள் உங்களைச் சந்தித்தோம். சந்திப்புகள் அனைத்திலும் விவாதங்கள், கருத்து பரிமாறல்கள், சந்தேக விளக்கங்கள், சண்டைகள் உறவுகள்! தமிழகத்தின் இயற்கையை ரசித்தோம், இந்தியாவின் சிறப்புகளை வியந்தோம். இந்தியாவில் ஒரு மானுடம், உழைக்கும் மானுடம் வீழ்ந்து கிடக்கிறது. அதன் ஆன்மாவை எம்மால் தரிசிக்க முடிந்தது. இந்தியாவில் உள்ளக முரண்பாட்டின் விளைவுகளாய், சோகமும், வேதனையும், வேலையில்லாமையும், பட்டினிக் சாவும், தெருவோர வாழ்வும்; அந்த வாழ்விலும் அவர்களின் களங்கமற்ற சிரிப்பும் மகிழ்வும்; அவர்களின் சண்டைகளையும், கோபங்களையும் அதனுள் இருக்கும் ஆற்றல்களையும் அதன் மன ஓசையைப் புரிந்து கொள்ள முடியாத வித்தகம் செய்யும் தத்துவவாதிகளையும், சமூக அமைப்பின் கோரங்களையும், நாங்கள் இங்கே கண்டோம்.

தேநீர்க் கடை ஓரத்திலும், சிகரெட் பிடித்தபடி பத்திரிகை புரட்டும் பெட்டிக் கடையிலும், கை ஏந்தி உணவைச் சுவைத்த படியும்; கன்னிமாராவிலும், தேவநேயப் பாவாணர் நூலகத்திலும், அதன் மகாநாட்டுக் கூடங்களிலும், கருத்தரங்குகளிலும், ஊர்வலங்களிலும் நாங்கள் கிளர்ச்சியுடன் சந்தித்து கொண்டோம். குற்றாலச் சாரலில் நனைந்தும்; தேக்கடியிலும், பெரியார் அணைக்கட்டிலும், மேற்கு மலைத் தொடர்ச்சிக் காடுகளில் அலைந்தும்; ஊட்டிக் குளிரில் விறைத்தும்; கொடைக்கானல் குளிரில் படகு விட்டும்; கோவில்பட்டி, சிவகாசி, அருப்புக்கோட்டை கரிசல் நிலத்தில் வெயிலில் வாடியும்; சேலத்தில், ஆத்தூரில் செம்மண் பரப்பைக் கண்டு வியந்தும்; வண்டிப் பெரியாரில், கடலூரில் மலையகத்தின் சோகத்தை எண்ணியும்; தீப்பெட்டி உற்பத்தித் திறனைக் கண்டு ஆச்சரியம் கொண்டும்; சிறுவர்கள் உழைப்பினைச் சுரண்டும் கோரத்தைக்கண்டு துணுக்குற்றும்; கிராமத்து அகலவாய்க் கிணறுகளிலும், மடைகளிலும் நீந்தி நீராடியும்; கம்பங்காட்டிலும், சோளக் கொல்லைகளில் வயல் வரப்புக்களில் நடந்து திரிந்தும்; கிராமங்கள் தோறும் பண்டைய கலைகளைக் காண்பதற்காய் இரவுகள் விழித்தும்; கும்மியும், குரவையும் கோலாட்டமும், தெருக்கூத்தும் கண்டு ரசித்தும்....

நண்பர்களே! உங்களோடிருந்த நினைவுகள் எம்மைக் கிளர்ந்தெழச் செய்கின்றன.

எந்த நினைவுகளை நாம் இந்நேரத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்!

ஈழம் பற்றி- ஈழப் போராட்டம் பற்றி தமிழக மக்கள் கனவுக்குள், மாயைக்குள் ஆழ்த்தப்பட்டுள்ளனர். செய்திகள் முழுமையாக அவர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆரம்பத்தில் எங்களைச் சந்தித்தவர்கள், 'நீங்கள் மலையாளமா பேசுகிறீர்கள்?' என்றனர். நாம் தமிழ் பேசும் மக்கள் என்பதையும், தமிழ் பேசுகிறோம் என்பதையும் நம்ப வைப்பது என்பது பரிய செயல் எங்களுக்கு. அப்புறம் 'பிழைக்கப் போனவன், அங்கு ஒத்து வாழ்வது தானே? என்ன தனி நாடு கேட்பது? கொழும்புச் சிங்களவர், யாழ்ப்பாணத் தமிழர்கள் இவர்களுக்கு சண்டை, அய்யோ பாவம் தமிழர்கள்; தமிழர்கள் கொல்லப்படுகின்றனரே, கற்பழிக்கப்படுகின்றனரே' என்ற ஓலம். அப்புறம், 'நான்கு கோடித் தமிழர்கள் நாங்கள், புறப்பட்டு வந்தோமானால் இலங்கை தாங்காது' என்ற வீரச் சொற்கள்; அப்புறம், உலகுக்கு அறிவித்து விட்டு பயணம் சென்றனர்; கருப்பு பாட்ஜ் அணிந்து துக்கம் கொண்டாடினர்; இராணுவம் தற்போது அனுப்பப்பட்டு விட்டது.

போராட்டம் முடிந்து விட்டது (?)

தமிழக மக்கள் பெருமூச்சு விட்டனர்; தங்களின் வழமைக்குத் திரும்பிவிட்டனர்.

மலையகத்தில் 10 இலட்சம் தமிழ் பேசும் மக்கள் கைவிடப்பட்டுள்ளனர். அவர்களின் துயரத்தை ஏன் தமிழக மக்கள் உணரவேயில்லை. இலங்கை நாட்டை வளப்படுத்தியவர்கள் இன்று 'நாடற்றவர்கள்'. மூன்று தலைமுறைக்கும் மேலாக சோகத்தையே சுமையாக்கி, கனவுகளையே உணவாக்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 150 வருடங்களுக்கு முன்னால் தமிழக மண்ணில் இருந்துதான் உங்கள் சகோதரர்கள் மலேசியாவுக்கும், பிஜி தீவுக்கும், இலங்கைக்கும் கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். 150 வருடங்களின் பின்னால் - மூன்றாம் தலைமுறைக்குப் பின்னால்-அவர்கள் இங்கே திரும்பி வந்த போது, எந்தப் பாவமும் அறியாத அவர்களை, தமிழக மக்கள் ஊரின் புறத்தே ஒதுக்கி வைத்திருக்கும் காட்சியையும் கண்ணீருடன் நோக்குகிறோம். வேற்று மொழி மாநிலங்களுக்குக் கொத்தடிமைகளாய் இவர்கள் விற்கப்பட்ட கதை எம் நெஞ்சத்தில் வலி ஏற்படுத்தியுள்ளது. இக் கொத்தடிமைகளை மீட்க அவர்களின் துயரங்களை அரங்கத்திற்குக் கொண்டு வந்த தமிழக நண்பர்கள் எங்கள் நினைவிற்கு வருகின்றனர். இவர்களை நண்பர்களாய் பெற்றதில் நாம் பெருமையடைகிறோம்.

தமிழக மக்கள் இன்று வெறும் வீர வழிபாட்டிற்குள் மூழ்கி உள்ளனர். துப்பாக்கி ஏந்திய ஈழப் போராளிகளின் படங்கள் தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்றிருந்தது. ஏனைய சமுதாயக் குழுக்களை விடவும், தமிழக மக்கள் வீரக் கனவுகளில் ஆழ்வதிலும், வீர வழிபாட்டில் மூழ்கி விடுவதிலும், தங்கள் வீரத்தைத் துறந்து விட்டனர். மதுரை வீரனும், கருப்பசாமியும், சில குல தெய்வங்களும் அவர்கள் வழிபாட்டிற்குரிய சிலை வடிவங்கள். அன்றைய குலம் காத்த வீரம் செறிந்தவர்களாக, தனி மனிதர்களை உயர்த்திப் பிடிக்கப்பட்டதை வரலாற்றுப் பொருள் முதல்வாதம் தெரிந்த நாம் எப்படி மறந்து விட முடியும்? அந்த மாயைக்குள் இருந்த அவர்களை வெளிக்கொணர்வதுதான் எவ்வளவு கடினம் என்பதில் நாம் பெற்ற அனுபவங்களை மறக்க முடியுமா? இந்த மாயைக்குள் சிக்காதவர்கள் ஆதலால் தானே நீங்கள் எங்களுக்கு நண்பர்களானீர்கள்!

வடமராட்சித் துன்பத்தை விடவும், கிழக்கு மாகாண விவசாயிகள் பெற்ற துன்பங்கள் கொடுமையானவை. அவர்களின் போராட்ட வாழ்வு மகத்தானது; அவர்கள் துயரங்கள் அளப்பரியன. மூதூரிலும், மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலையிலும், தங்கவேலாயுதபுரத்திலும் அவர்கள் மரணத்துள் வாழ்ந்தார்கள். ஆனால் தமிழக மக்களும் அவர்களின் தளபதிகளும் இந்த மக்களின் துயரத்தின் போது மெளனமாக இருந்தனர். எமது இதயத்தில் ரத்தம் கசிந்தது. யாழ்ப்பாண விளம்பரத்திற்குள், அந்த மக்கள் அடைந்த சோகம் மறைக்கப்பட்ட போது நண்பர்களே! நீங்கள் தான் எங்கள் கவலைகளில் பங்கு கொண்டீர்கள்.

போராளிகள் வானத்தில் இருந்து குதித்த தேவர்கள் என்றுதான் தமிழக மக்கள் எம்மை நம்பியிருந்தனர். வீர வழிபாட்டில் மூழ்கி இருக்கும் சமுதாயத்தில் இது தவிர்க்க முடியாதது ஆகும். தமிழக ஆட்சி மாற்றங்களைக் கவனிப்போர், இந்த ஆட்சி மாற்றங்கள் வீர வழிபாட்டு மனப்பான்மையின் பங்காயிருப்பதை உணரலாம். இக் கருத்தை நாம் உடைக்க முயற்சி செய்தோம். நாங்கள் போராளிகள்; இரத்தமும் சதையுமான மனிதர்கள்; இந்தச் சமூக அமைப்பின் விளை பொருட்கள் இந்தச் சமூக அமைப்பின் எச்சங்கள் எங்களையும் ஒட்டியுள்ளன போராளிகளை, போராட்டத்தை இவ்வகையிலேயே நோக்குங்கள் என்று அடித்துச் சொன்னோம். ஆனால் நண்பர்களே! உங்களால் தான் அந்த உண்மையை உணர்ந்து கொள்ள முடியும். தமிழக மக்களும், போராளிகளின் சமூக விரோதச் செயல்களையும், சட்ட ஒழுங்கு மீறலையும் கண்டு முகத்தைச் சுழித்தனர்; ஏளனமாய் நோக்கினர். நாங்கள் அனிச்சமலராய் சுருங்கிப் போனோம்.

இச்சமூக அமைப்பை, அதன் குணாம்சத்தை, அதன் வெளிப்பாடுகளைப் புரிந்து கொண்ட நண்பர்கள் எங்களை அரவணைத்தனர். ஆதரவு காட்டினர்.

ஈழத்தின் உள்ளக முரண்பாடுகள் உங்களுக்கு இங்கே மறைக்கப்பட்டுள்ளன; நாங்கள் அவற்றை வெளிப்படையாகவே உங்கள் முன் வைத்தோம். தேசிய இனப் பிரச்சனையின் கூர்மைக்குள் உள்ளக முரண்பாடுகள் மறைக்கப்பட்டிருந்தன. இவற்றை கேள்விப்பட்ட வேளையில் உங்களுக்குக் கசப்பாகத் தான் இருந்தது. ஏனெனில் இங்கிருந்த உள்ளக முரண்பாட்டின் கோரங்கள் உங்களை மிகவும் பாதித்திருந்தன. தேசிய இனப் போராட்டத்தின் உச்சத்தில் உள்ளக முரண்பாடுகளின் கோரங்கள் நீங்கிய ஒரு சமுதாயம் ஈழத்தில் அமைய வேண்டுமென நீங்கள் விரும்பினீர்கள். அதற்காகவே ஈழப் போராட்டத்தை திரிகரண சுத்தியுடன் ஆதரித்தீர்கள். ஏற்றத்தாழ்வும், சாதிய வேறுபாடும், சுரண்டலும், பிற்போக்குத் தனங்களும் நீங்கிய ஒரு ஈழத்தை உருவாக்க நாங்களும், நீங்களும் கனவு கண்டோம். ஆனால் இந்திய சுதந்திரப் போராட்ட வேளையில், ஒரு கட்டத்தில் பாரதி பாடிய பாடல் ஒன்று ஏனோ இவ்வேளையில் எங்களுக்கு நினைவிற்கு வருகிறது:

"தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் வளர்த்தோம் கருகத்திருவுளமோ."
இவ்வரிகள் எங்களுக்கு மிகச் சரியாகப் பொருந்துமா என்பது
தெரியவில்லை.

நண்பர்களே! இது விடைபெறும் நேரம்தானா என்பது தீர்மானமாகவில்லை. ஆனாலும் எங்கள் நினைவுகள் உங்களின் அன்பு, நட்பு, தோழமை இவற்றையே தாங்கியுள்ளன. உங்களிடமும் இவற்றையே கையளித்துள்ளோம்.

என்றென்றும் அன்புடனும்,
நட்புடனும்,
தோழமையுடனும்,
சுந்தர்,
ஆகஸ்டு '87

நன்றி: மதுரை மின்தொகுப்புத்திட்டம்