|
 |
|
       |
|
      |
|
|




|
| |
|
 |
| |
 |
| |
|
[1986 முதல்
ஏறத்தாழ 17 ஆண்டுகளாகத் தமிழைக் கணினியில் பயன்படுத்துவதற்குரியதாக ஆக்கும்
பணியில் தன்னை அர்பணித்துக் கொண்டிருப்பவர் முத்து நெடுமாறன்.இன்று முன்னணி
இணைய இதழ்கள், வலைப் பக்கங்கள், மடலாற் குழுக்கள், ஆவணக் களஞ்சியங்கள்,
கல்வி சிப்பங்கள் அவரது எழுத்துருக்களைப் பயன்படுத்தி வருகின்றன. ஆனாலும்
நெடுமாறன், கணினியில் நாள் தோறும் நடந்து வரும் மாற்றங்களுக்குத் தமிழ் ஈடு
கொடுக்கும் வகையில் தன் பணிகளைத் தொடர்ந்து நவீனப்படுத்திவருகிறார்.] |
| |
மலேசிய நாட்டில் ஓர் எழுத்தாளர், சிறந்த நாவல்
ஒன்றைக் கணினியிலேயே எழுதி முடித்திருக்கிறார். இந்த நாவலைத் தமிழ்
நாட்டில் நூலாக்க வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு. எனவே, சில நூறு
பக்கங்கள் அடங்கிய அந்தக் கணினிக் கோப்பை, மின்-அஞ்சல் வழி, தமிழ் நாட்டுப்
பதிப்பகம் ஒன்றுக்கு அனுப்பி வைக்கிறார்.
உடனே மறுமொழி வருகிறது....
"நீங்கள் அனுப்பிய பைல்-ஐ எங்களால் திறக்க முடியவில்லை. புரியாத எழுத்தில்
வருகிறது. எங்களிடம் உள்ள தமிழ் எழுத்துருக்களை
(Fonts) எல்லாம் போட்டு பார்த்துவிட்டோம். எதுவுமே
சரியாக வரவில்லை. தயவு செய்து உங்கள் கதையை பிரிண்ட் பண்ணிக் கூரியர்
மூலமாக அனுப்புங்கள். நாங்கள் மீண்டும் டைப் செய்து கொள்கிறோம்".
இது பலருக்கும் தெரிந்த பழங்கதை என்றாலும், இன்னும் நடந்து கொண்டுதான்
இருக்கிறது.
கணினியில் தமிழைக் காண வேண்டும் என்ற முயற்சிகள் தொடங்கிய காலம் தொட்டே
குறியீட்டுமுறைக் குழப்பம் இருந்து வந்துள்ளது. தொழில் நுட்ப வல்லுநர்கள்
தீர்க்க வேண்டிய பிரச்சனையாக இது இருந்தாலும், பயனாளர்களை இது பாதிக்காமல்
இருந்ததில்லை.
தமிழ் இணைய மாநாடுகள் கூடும் போதெல்லாம், "இந்த ·போண்ட் பிரசினைக்கு இந்த
மாநாட்டில் தீர்வு காணப்படுமா?" என்ற கேள்வி எழாமல் இருந்ததில்லை.
தகுதரம் எனப்படும் "திஸ்கி", "தாப்" மற்றும் "தாம்" எனும் குறியீட்டுமுறைகள்
ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தாலும், பயன்பாட்டில் சில பிரசினைகள் இருக்கவே
செய்கின்றன. ஆங்கிலத்தில் இருக்கும் உறுதிப்பாட்டைத் (Gurantee) தமிழில் இன்னும் நாம் காண முடியவில்லை. அதாவது,
தமிழில் அனுப்பப்படும் ஒரு செய்தியோ, ஆவணமோ, போய்ச் சேரும்போது தமிழிலேயே
தோன்றும் என்பதை இன்னும் நம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை.
"இது இப்படி இருந்தால்தான், அல்லது இவை இவற்றை இப்படி மாற்றி அமைத்துக்
கொண்டால்தான், உங்கள் கணினித் திரையில் தமிழில் தெரியும்" என்றுதான் சொல்ல
வேண்டியுள்ளது.
"இந்தப் பிரசினைகளையெல்லாம் யூனிகோட் தீர்த்துவிடும்" என்று ஒரு சாரார்
கூறிவருவதையும் கேட்டுள்ளோம். இந்தக் கூற்றில் உண்மை இருக்கிறது.
இருந்தாலும், சில 'dependancies'
உள்ளன.
யூனிகோட்டிற்கும், இன்று நாம் கணினியில் பயன்படுத்தி வரும் தமிழுக்கும் என்ன
வேறுபாடு?
இப்போது நாம் பயன்படுத்தும் தமிழ், "வாடகை வீட்டுத்" தமிழ். நமக்கென்று ஒரு
வீடு இல்லை - வீடு கட்ட வசதி இருந்தும் இடம் இல்லை. எனவேதான் வாடகை
வீட்டில் இருந்து வருகிறோம். வீட்டில் நாம் குடியிருந்தாலும் வீட்டுக்குச்
சொந்தக்காரர் நாம் அல்லர் - ஓர் ஐரோப்பியர்!
நகராண்மைக் கழகத்தைப் (அதாவது கணினியைப்) பொறுத்தவரை, இந்த வீட்டில் இருந்து
வருபவர் ஓர் ஐரோப்பியர். அவருக்கு ஏற்றவாறே சூழ்நிலைகளையும் அமைத்துத்
தருவார்.
வாடகை வீட்டில் இருந்து என்னதான் தமிழில் நாம் செய்தி அனுப்பினாலும்,
கணினியும் இணையமும் அதனை ஓர் ஐரோப்பிய மொழியில் அமைந்த செய்தியாகத்தான்
கருதும். எனவேதான், குறிப்பிட்ட அந்த எழுத்துரு கணினியில் இல்லையென்றால்,
பொருத்தமான ஓர் ஐரோப்பிய எழுத்துருவை நமக்குப் போட்டுக் கொடுக்கிறது.
இதன் காரணமகவே, "வேர்ட்" போன்ற செயலிகள், சரியாக இருக்கும் "தமிழ்" வரிகளில்
கூட குற்றம் காண்கின்றன! இவை தமிழ் வரிகள் என்பதை அவை ஏற்றுக் கொள்ளவில்லை.
கணினியைப் பொறுத்தவரை அதன் வேலையை சிறப்பாகவே செய்கிறது. ஆனால் நமக்கு எந்தத்
தடையும் இன்றித் தமிழ் வேண்டுமே!
யூனிகோட்டில் இந்தப் பிரசினை இல்லை. நிறைய இடம் உள்ளது. அதுவும்
தமிழுக்கென்றே தனி இடம் ஒதுக்கப் பட்டுள்ளது. இந்த இடத்தில் எந்த
"ஸ்டைலில்" வீடு கட்டினாலும், அது ஒரு தமிழரின் வீடு என்பதை கணினியும்
இணையமும் உணர்ந்து கொள்ளும். அதற்கேற்றாற் போல் சூழ்நிலைகளையும் அமைத்துக்
கொடுக்கும். சரியான தமிழில் பிழை காணாது. பிழையுள்ள தமிழை திருத்தவும்
வாய்ப்பளிக்கும். தேவைப்படும் ஒரு தமிழ் எழுத்துரு இல்லை என்றால் வேறொரு
தமிழ் எழுத்துருவைத் தானாகவே மற்றிக் கொடுக்கும். எந்தத் தமிழ்
எழுத்துருவும் இல்லையென்றால் - ஒன்றுமே தோன்றாது. தோன்றிற் புகழொடு மட்டுமே
தோன்றும் - தமிழ்!
யூனிகோட் அமைப்பில் தமிழ் வரிகளுக்குப் "பாதுகாப்பு" வழங்கப்படும்.
அனுப்பப்படும் செய்தி பெறப்படும் போது, தமிழிலேயே தோன்றும்!
தமிழுக்கு இப்படிப்பட்ட ஒரு நிலைப்பாடு இருக்கும் போது, உடனே அதற்கு மாறிவிட
வேண்டியதுதானே? மாறிவிடலாம் - சில தேவைகள் உள்ளன. இரண்டை மட்டும் இங்குக்
காண்போம்.
1. கணினி
முதலில் நாம் பயன் படுத்தும் கணினிக்கு யூனிகோட் புரிய வேண்டும். பழைய
விண்டோஸ் இயங்குதளங்களில் (விண்டோஸ்95,
98, Me ஆகியவை) யூனிகோட் அமைப்பு முழுமையாக அமலாக்கப்
படவில்லை. எனவே, இவற்றில் யூனிகோட் தமிழை இயக்குவது கடினம். வாடகை வீட்டுத்
தமிழிலேயே இவை தொடர்ந்து இயங்க வேண்டும். ஆனாலும், யூனிகோட் அமைப்பில் உள்ள
தமிழ் இணையப் பக்கங்களை இவற்றில் படிக்கலாம். இந்த அடிப்படையில்தான்
"திசைகள்", யூனிகோட் அமைப்பை ஏற்றுள்ளது, வரவேற்கத் தக்க ஒன்று.
புதிய இயங்குதளங்கள் பலவற்றிலும், யூனிகோட் தமிழைத் தடையின்றிப் புழங்கலாம்.
விண்டோஸ்2000, விண்டோஸ்Xp, புதிய மெக்கிண்டாஷ் கணினிகள் ஆகியவற்றிலும்,
புதிதாக வருகின்ற லினக்ஸ் தளத்திலும் தமிழுக்குச் சொந்த வீடு உண்டு.
2. செயலி
முழுக்க முழுக்க யூனிகோட் அமைப்பில் இயங்கும் செயலிகள் நாளுக்கு நாள்
அதிகரித்துக் கொண்டே வருகின்றன. மைக்ரோஸாப்ட் ஆபீஸ் Xp, Internet Explorer, Outlook Express,
Adobe InDesign முதலிய செயலிகள் இந்த வரிசையில் அடங்கும்.
இலவசத் தொகுப்பான
OpenOffice.Org செயலிகளிலும் கூட, யூனிகோட் அமலாக்கப்
பட்டுள்ளது. மேலும் தமிழிலேயே இந்தச் செயலித் தொகுப்பை இயக்கவும்
வாய்ப்புண்டு.
புழக்கம் அதிகரிக்கும்போதுதான், பயன்பாட்டுக்கு மேலும் பல செயலிகள் தோன்றும்.
எவ்வளவு விரைவாக நாம் வாடகை வீட்டை விட்டு சொந்த வீட்டிற்குக்
குடிபோகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு கணினியிலும் இணையத்திலும் தமிழ்
வெற்றிக்கொடி நாட்டும்.
நன்றி:
திசைகள் |
| |
|
|
 |
|
|