முதல்பக்கம்அறிமுகம்கவிச்சோலைகட்டுரைகள்சிறுகதைகள்படித்துச்சுவைத்தவைசைவமும் தமிழும்

குறளும் நிகழ்வும்கணினிக்கட்டுரைகள்மென்பொருள்யுனிகோட் கட்டுரைகள்நிகழ்வுகள்உங்கள் எண்ணங்கள்



 
 
 
 
ழத்தில் கோண்டாவிலைப் பிறப்பிடமாகக்கொண்ட திரு.சம்பந்தனது தந்தையார் திரு.இராசையா அவர்கள் ஒரு பண்டிதராவார். சம்பந்தன் பட்டம் பெறாத ஒரு பண்டிதர் எனத் துணிந்து கூறலாம். யாழ்ப்பாணத்தில் பரமேஸ்வராக் கல்லூரியில் தனது ஆரம்பக்கல்வியைப் பெற்ற சம்பந்தன் எண்பதுகளின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் பிரபல ஆசிரியரும்கூட. இவரது மாணவர்கள் இவரை 'மாஸ்ரர்' என அழைத்து பின்னாளில் மாஸ்ரர் என்பதே இவரது இன்னுமொரு பெயராக ஆகிற்று.

இவரது பத்தொன்பதாவது வயதில் 1980ம் ஆண்டு இவர் எழுதிய முதலாவது சிறுகதையான "இதயத்தின் கதவுகள்" தினகரன் பத்திரிகையில் வெளியானது. 1983ம் ஆண்டுவரை தினகரன், ஈழநாடு ஆகிய பத்திரிகைகளில் இவரது சிறுகதைகள், கவிதைகள் என்பன வெளியாகின. தவிர இன்றைய தலைசிறந்த  ஈழத்துக் கவிஞர்கள் பலருடனும் பல மேடைகளில் பல கவியரங்குகளில் பங்கு பற்றி தனது முத்திரையைப் பதித்தவர்.

1983 க்குப் பின் புலம்பெயர்ந்து வந்த இரா.சம்பந்தன் 1991ம் ஆண்டு முதல் தமிழோசை பத்திரிகையில் எழுத ஆரம்பித்தவர், கதைகள், சிறுகதைகள் மட்டுமல்லாது காவியங்கள், நாடகங்கள், விமர்சனங்கள் என எழுத்துலகின் பல முனைகளிலும் தன்னை ஒரு பண்பட்ட எழுத்தாளனாக நிரூபித்துள்ளார். தமிழரங்கம் வானொலியில் ஒலிபரப்பாகும் "குறள் தரும் விளக்கம்" இவரது ஆழ்ந்த இலக்கிய அறிவுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
சாதாரணமாக பல எழுத்தாளர்களுக்கு இல்லாத எளிமையும், தன்னடக்கமும் நிறையப்பெற்றவர் சம்பந்தன் என்பது இவரது முக்கிய சிறப்புக்களில் ஒன்றாகும்.

இவரது பல கவிதைகள், சிறுகதைகள் என்பனவற்றில் சிலவற்றை இங்கு பிரசுரிப்பதில் 'எழில்நிலா' பெருமைப்படுகின்றது.

 

 
இதுதான் காதல்
 
தென்றலுக்கோ மலர்மீது தீராக் காதல்
தேன்சுரக்கும் மலருக்கோ வண்டில் காதல்
தென்றலோ காதலால் பூமீது மோதும்
தெரிந்தாலும் வண்டந்த வண்டோடு போகும்!

சலசலக்கும் அருவிக்கோ நதியில் காதல்
சஞ்சரிக்கும் நதியதற்கோ கடலில் காதல்
அருவிதினம் ஊற்றெடுத்து நதியில் பாயும்
அலைகடலில் தலைவைத்து நதியும் சாயும்!

பஞ்சுநிகர் முகிலதற்கோ நிலவில் காதல்
பனிபடர்ந்த மலைமீதே நிலவின் காதல்
கெஞ்சிமுகில் சிலவேளை நிலவைப் பார்க்கும்
கொஞ்சிவிட நிலவந்த மலையை நோக்கும்!

இமைகளுக்கோ கண்மீது இருக்கும் காதல்
இருவிழிக்கும் அதைமீறி அப்பால் காதல்
இமைமூடித் தனையந்த விழிக்குக் காட்டும்
இருவிழியும் அதைவிட்டு வெளியே நோக்கும்!

வான்மழைக்கு நிலன்மீது வளரும் காதல்
வன்நிலமோ நெருஞ்சிக்கே மார்பு காட்டும்
வான்மழையின் மென்துளியை விரும்பா மண்ணோ
வளர்நெருஞ்சி முட்கீறும் நோவுக்கு ஏங்கும்!

தனையடக்கித் திசைவகுக்கும் துடுப்பைக் காவிக்
காதலித்து மகிழ்ந்திருக்கும் ஓடம் என்றும்
அலையெனும்கை மெதுவாக எடுத்து ஏந்தும்
ஆறுகளைப் பார்க்காது இதுதான் காதல்!
 

 
தீபாவளி
 
கொடுத்தவரம் தவறாகிக் கொடிய துன்பம்
     குவலயத்தில் தலைவிரித்து ஆடும் போது
படுத்திருந்தால் பாற்கடலில் பாவம் என்றே
     பகவானும் வெகுண்டெழுந்து படையை ஏவி
எடுத்தெறிந்தான் அசுரனது உயிரை அந்த
     இனியதினம் தீவாளித் திருநாள் என்றும்
அடுத்தவிருள் விலகியதால் அந்த நாளில்
     அழகாக தீபமிடும் உலகம் இன்றும்.

புத்தாடை விலைபோகும்! புகுந்த கூட்டம்
     பொல்லாத விலையென்று பொருமும்! வாங்கும்!
முத்தாக நீர்வடியும் கண்கள்! ஏதும்
     முடிவாகா திருநாளாய் முடிந்தும் போகும்!
அத்தானைப் பகையாக்கும் ஆசைச் சேலை!
     ஆத்தாளைப் பகையாக்கும்! அதனால் மாந்தர்
பத்தோடு நூறாகக் கடன்பட் டேனும்
     பயத்தோடு நடந்திடுவார் இந்த நாளில்!

ஆடெல்லாம் உயிர்துறக்கும் இறைச்சிக் காக!
     ஆனபனைக் கள்ளருந்திக் களிக்கும் நெஞ்சம்!
கூடெல்லாம் அடைபட்டுக் கிடந்த கோழி
     குழம்பாகிக் கமகமக்கும்! மாலை வந்தால்
வீடெல்லாம் புதுப்படங்கள் பார்க்க ஓடும்!
     வெடிகேட்கும்! மணிகேட்கும்! கோயில் தோறும்
நாடெல்லாம் இவ்வாறாய் நரகா சூரன்
     நாளிதனைக் கொண்டாடும் நன்று! நன்று!!

உள்ளத்தை இருளாக்கிக் கொண்டு தீபம்
     ஊர்கூடி ஏற்றுவதும் உணவுக் காக
கள்ளத்தை அறியாத ஆட்டைக் கட்டிக்
     கழுத்தரிந்து கொல்லுவதும் கள்ளை உண்டு
வள்ளத்தைப் போலாடி இங்கும் அங்கும்
     வழிமாறி அலைவதுவும் சினிமாப் பார்த்து
பள்ளத்தில் அறிவொளியைப் போட்டு மேலும்
     பாமரராய் ஆவதுமே சமய வாழ்வாம்!

நெஞ்சத்தில் கெட்டதெலாம் நீக்கி நேர்மை
     நிறுவுமெனில் தீபநாள் வரட்டும்! ஏங்கித்
தஞ்சத்தில் கிடக்கின்ற ஏழைக் கேதும்
     தருமேனும் என்றாலும் வரட்டும்! இல்லை
வஞ்சத்தை முறியடிக்க வாழ்வில் ஏதும்
     வழிகாட்டும் என்றாலும் வரட்டும்! ஆனால்
பஞ்சத்தை அன்புக்குப் பகிர்ந்து தந்தால்
     பகவானின் நாளேனும் வேண்டாம் இங்கே!