மனம் வெளுக்க
தமிழ் மொழிக்குப் புத்துணர்வு தந்து, பாமரமக்களும் புரிந்துகொள்ளும்
வகையில் இனிய
கவிதைகளை எழுதியவர் மகாகவி பாரதியார். பழைய தமிழை புதிய வடிவில் வடித்து
தந்தவர்.
அவர் மனதின் இயல்புகளை மிக அழகாக, எளிய முறையில் வருணித்து இருக்கிறார்.
'கடல் பொங்கி எழுந்தாலும் கலங்க மாட்டோம் !
யாருக்கும் அஞ்சோம் ! எதற்கும் அஞ்சோம் !
என்று கூறித் தன்னுடைய தன்னிகரில்லா நெஞ்சத்துணிவையும், மன உறுதியையும்,
வினை
நுட்பத்தையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார் பாரதியார்.
மனத்தில் பெண்மையின் பண்புகளைக் காண்கிறர் அவர். ஒன்றையே பற்றி ஊசலாடும்
என்றும், அடுத்துவரப் போவதை எதிர்நோக்கி உலாவும் என்றும், ஒன்றையே
கொள்ளுமாறு கூறும்போது சோர்வுடன் கைநழுவி விட்டுவிடும் என்றும்,
புறக்கணிக்குமாறு கூறுவதை விரைந்து சென்று
கொழுக் கொம்பாகப் பற்றி நிற்கும் என்றும், தொடங்கிய செயலை மீண்டும்
மீண்டும் தொடும் என்றும், புதுமையான ஒன்றைக் கண்டதும் புலன் அழிந்திடும்
என்றும் மிக அழகாக ஒப்புநோக்கி வருணித்திருக்கிறார் பாரதியார்.
ஒருபுறம் புதுமையை விரும்பும் மனம், மறுபுறம் அதன் விளைவைக் கண்டு
அஞ்சுகிறது.
பழம்பொருட்களாக மீண்டும் மீண்டும் பரிந்து செல்கிறது. இவ்வாறெல்லம்
இருப்பினும்
தன்னிடத்தில் நிலையான அன்பு கொண்ட ஒன்றாக மனத்தை விரும்பி வேண்டுகிறார்
பாரதியார். அதனை மேம்படுத்தி, என்றும் அதனிடம் இன்பமே பெற விழைவதாகப்
பாடுகிறார்.
அதன் விழிப்படாமல் தன் விழிப்பட்ட சிவம் என்னும் பொருளைத் தினமும் போற்றி
மனத்திற்கு இன்பம் ஓங்கிடச் செய்வதாகக் கூறுகிறார்.
மனத்தைச் சக்தியின் கருவியாக ஆக்கிக் காட்டும் பாரதி, அதை நலமுறப் பேணும்
வகையையும் நமக்குக் காட்டுகிறார். மனத்தில் கறைபடிந்து விடாமல் இருக்க
ஒவ்வொருவரும் முயலவேண்டும். அவ்வாறு மனத்தைத் தூய்மையாக வைத்துக் காப்பது
எளிதல்ல என்றும் பாடுகிறார் பாரதியார்.
'' துணி வெளுக்க மண்ணுண்டு-
தோல் வெளுக்கச் சாம்பருண்டு
மணி வெளுக்கச் சாணை உண்டு -
மனம் வெளுக்க வழி இல்லை !
- என்கிறார்.
மன உறுதியையும், மனத்துணிவையும் மானிடம் அனைவரும் பெற்றிடல் வேண்டும் என்று
சுட்டிக்காட்டி,
''நெஞ்சிற் கவலைதனை நித்தம் பயிராக்கி
அஞ்சி உயிர்வாழ்தல் அறியாமை''
என்றும்;
''மனத்தில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை !''
என்றும் பாடுகிறார்.
ஆதலால், ஒருவன் அறிவு மிக்கவனாக இருந்தால் மட்டும் போதாது. பரந்து விரிந்த
கருணை
உள்ளமும், மாசு நீங்கிய மனமும் அவனுக்கு இன்றியமையாதது. இதை முயன்றே
பெறப் பழகிக்கொள்ள வேண்டும் என்கிறார் பாரதியார். |