| |
 |
|
|
|
இங்கு இடப்பட்டிருக்கும் கவிதைகள் யாவும்
ஏதோ ஒரு வகையில் என்னைக் கவர்ந்திருக்கின்றன. இவை உங்களையும்
கவரலாம்..! படித்துப் பாருங்களேன்..! |
| |
|
|
தூக்கம்விற்ற காசுகள்
இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ அயல்தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ்!
விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது!
நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால்...
வாசனைகள் இருக்கலாம்!
ஆனால் வாழ்க்கையில்...?
தூக்கம் விற்ற காசில்தான்...
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே...
இளமை கழிக்கின்றோம்!
எங்களின் நிலாக்கால
நினைவுகளையெல்லாம்...
ஒரு விமானப்பயணத்தூனூடே
விற்றுவிட்டு
கனவுகள்
புதைந்துவிடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம்!
மரஉச்சியில் நின்று
ஒரு தேன் கூட்டை கலைப்பவன் போல!
வாரவிடுமுறையில்தான்..
பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!
அம்மாவின் ஸ்பரிசம்
தொட்டு எழுந்த நாட்கள்
கடந்து விட்டன!
இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!
பழகிய வீதிகள் பழகிய நண்பர்கள்
கல்லூரி நாட்கள் தினமும் ஒரு இரவு
நேர கனவுக்குள் வந்து வந்து
காணாமல் போய்விடுகிறது!
நண்பர்களோடு ஆற்றில்
விறால் பாய்ச்சல்
மாட்டுவண்டிப் பயணம்
நோன்புநேரத்துக் கஞ்சி
தெல்கா - பம்பரம் - சீட்டு - கோலி என
சீசன் விளையாட்டுக்கள்!
ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து...
விளையாடி மகிழ்ந்த உள்ளுர்
உலககோப்பை கிரிக்கெட்!
இவைகளை
நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்...
விசாவும் பாஸ்போட்டும் வந்து...
விழிகளை நனைத்து விடுகிறது.!
வீதிகளில் ஒன்றாய்
வளர்ந்த நண்பர்களின் திருமணத்தில்!
மாப்பிள்ளை அலங்காரம்!
கூடிநின்று கிண்டலடித்தல்!
கல்யாணநேரத்து பரபரப்பு!
பழையசடங்குகள்
மறுத்து போராட்டம்!
பெண்வீட்டார் மதிக்கவில்லை
எனகூறி வறட்டு பிடிவாதங்கள்!
சாப்பாடு பரிமாறும் நேரம்...
எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!
மறுவீடு சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை!
இவையெதுவுமே கிடைக்காமல்
"கண்டிப்பாய் வரவேண்டும்
" என்ற சம்பிரதாய அழைப்பிதழுக்காக...
சங்கடத்தோடு
ஒரு
தொலைபேசி வாழ்த்தூனூடே...
தொலைந்துவிடுகிறது
எங்களின் நீ..ண்ட நட்பு!
எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள் அயல்தேசத்து
ஏழைகள்தான்!
காற்றிலும் கடிதத்திலும்
வருகின்ற சொந்தங்களின்...
நண்பர்களின் மரணச்செய்திக்கெல்லாம்
அரபிக்கடல் மட்டும்தான்...
ஆறுதல் தருகிறது!
ஆம்
இதயம் தாண்டி
பழகியவர்களெல்லாம்...
ஒரு கடலைத்தாண்டிய
கண்ணீரிலையே...
கரைந்துவிடுகிறார்கள்;!
"இறுதிநாள்" நம்பிக்கையில்தான்...
இதயம் சமாதானப்படுகிறது!
இருப்பையும் இழப்பையும்
கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது இழப்பு மட்டும்தான்...
பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம் முதல் பேச்சு...
முதல் பார்வை... முதல் கழிவு...
இவற்றின் பாக்கியத்தை
தினாரும் - திர்ஹமும்
தந்துவிடுமா?
கிள்ளச்சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை...
தொலைபேசியில் கேட்கிறோம்!
கிள்ளாமலையே
நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
யாருக்குக் கேட்குமோ?
ஒவ்வொருமுறை ஊருக்கு
வரும்பொழுதும்...
பெற்ற குழந்தையின்
வித்தியாச பார்வை...
நெருங்கியவர்களின் திடீர்மறைவு
இப்படி
புதிய முகங்களின்
எதிர்நோக்குதலையும்...
பழையமுகங்களின்
மறைதலையும் கண்டு...
மீண்டும்
அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்...
தங்கையின் திருமணமும்...
தந்தையின் கடனும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு!
- ரசிகவ் ஞானியார், துபாய்
|
காத்திருக்கிறேன்.
ஷைலஜா
பத்திரமாய் இருக்கிறது
பாதுகாப்புப் பெட்டறையில்
உன் கடிதம்.
அவ்வப்போது எடுத்துப்
பார்க்கிறேன்
பிரிக்கும்போதே
மடிப்புகளில் விரிசல்
பழுப்பேறி விட்டாலும்
பழைய தாளிலும் உன்
பளிங்கு உடல் வாசம்
முத்தான கையெழுத்து உன்
முறுவலைப் போல.
ஒவ்வொருவருக்கும்
கையெழுத்துப்
பிரத்தியேகமாம்
தனி மனித
அந்தரங்கம்
மன நிஜத்தின்
நிழல்
கையெழுத்தில்
அவரவர்தம்
தலையெழுத்தைக்
கூறலாமாம்
எனக்குத் தெரியவில்லை.
சில விஷயங்கள்
தெரியாமலிருப்பதே
நல்லதுதான்.
கவிதையாய் எழுதிவிட்டுக்
கடிதமென்று சொல்வாய்.
கவிதைக்குத்தான்
பொய் அழகு
வாழ்க்கைக்கு அல்ல
உண்மைகளை உதறிவிட்டு
ஒருநாள் சென்றுவிட்டாய்.
மறந்தே போனாயா
மறைந்தே தான் போனாயா?
என்றாவது நீ
வருவாயென்று
காத்திருக்கும்
என்னோடு
உன் கடிதமும்.
|
|
|
|
பேய்களுக்கும் முனிகளுக்குமிடையே பெரிய
வேறுபாடில்லை.
'உலைக்களம்' வியாசன்.
அறுவடை முடித்த வயல்கள் வெளிச்சோடின
ஒரு சிறங்கை மணிகூடக் கிட்டவில்லை நமக்கு.
காற்று அடித்ததுதான்
எடுத்துத் தூற்றவில்லையே எம் நெற்சூடு.
மழை பெய்தது
எம் தாமரைக்குளத்துக்கு மட்டும்
தண்ணீர் வரவில்லை.
வெளி வீதி சுற்றி
காவடி தோளிருந்து இறங்கும்
நேரம் வந்தாச்சா?
வலிக்கிறது தோள்மூட்டு
வரமேதும் கிட்டவில்லையே நமக்கு.
ஈழத்தமிழர் மீண்டுமொருமுறை
இளிச்சவாயர் ஆனோமா?
பூ மலரும் வடிவு பார்க்க
வாசலிருந்தோம் நம்பிக்கையுடன்.
பூவும் மலரவில்லை
பூ மரத்தின் வேரும் தெரியவில்லை.
நிலவு பார்க்கும் ஆசையில்
இரவெல்லாம் விழித்திருந்தோம்.
நிலவையும் காணவில்லை
விழித்திருந்த இரவையும் காணவில்லை.
பத்து நாள் அலங்காரத்திருவிழா
முற்றுப்பெறுகின்றது.
எஞ்சியிருப்பது கொடியிறக்கம் மட்டுமே.
சிகரங்கள் இறங்குகின்றன.
சின்னமேளங்கள் போய்விட்டன.
தவில்காரரும் புறப்படுகின்றனர்.
காப்புக்கடைகளைக் கலைத்து
கட்டத்தொடங்கியாயிற்று.
சில கடலைக்காரரே மீதி.
இனி அவர்களும் போய்விடுவார்கள்.
எல்லோரும் போகலாம்.
கோவில் வீதிக்குடியிருப்பாளர்கள்
எங்கே போவது?
ஜிகினா வெளிச்சத்தில் குதித்த
அலுப்புத்தீர
ஒரு பகல் உறங்கலாம்
அதன்பிறகு என்ன?
வேள்வி நடத்த கோயிலில்
அலங்கார உற்சவத்துக்கு ஆசைப்பட்டோம்
நடந்தது என்ன?
கூத்து நடந்தது பார்த்துப் பரவசமடைந்தோம்.
இப்போ கூத்தும் முடிந்துவிட்டது.
எந்த வாழ்வும் கிட்டவில்லயே எமக்கு.
எங்கேனும் சின்னக்கிளைகளில்
அரும்பு கட்டத்தொடங்கினால் போதுமே
ஆதிக்க மாடுகள் அதனை மேய்ந்துவிடுகின்றன.
அழகிய ஜீவிதத்திற்காக
சின்னக் கூடு கட்டுவோமென
சிட்டுக்குருவிகள் சுள்ளி பொறுக்கினாற்கூட
பருந்துகள் பொறுத்துக்கொள்வதில்லை.
குருவிகளை அடித்து வாயிற் போடுகின்றன.
நம் வயலின் விதைப்புக்கு நாமுழுதாற்கூட
அண்டை வயற்காரன் சண்டைக்கு வருகின்றான்.
ஈழத்தமிழருக்கு
இது எழுதிவைத்த விதியாச்சு.
எட்டு மூலைப்பட்டம் கட்டி இரவிலேற்றினோம்.
விடியும்வரை விண்சத்தம் கேட்டது.
பட்டத்தைத்தான் எவரும் பார்க்க முடியவில்லை.
சப்த நதிகளும் கூடி
அட்ட திக்கு யானைகளும் கூடி
ஊரையடித்து உலையிற்போடும்
பகாசுரர்களும் கூடி
எமக்கு பந்தி பரிமாற வந்தனர்.
பாயாசம் என்றனர்.
வாழையிலை விரித்து வரிசையிலிருந்தோம்
என்ன விழுந்தது இலையில்?
ஆக்கித் தந்ததும் ஒன்றுமில்லை.
தூக்குச் சட்டியிலும் ஒன்றுமில்லை.
மின்சாரம் வந்தது,
எரிசாராயம் வந்தது,
டயலொக் வந்தது,
மொபிற்றல் வந்தது,
அங்கர் பட்டரும்
மக்கி நூடில்சும் வந்தது,
பிதாமகன் வந்தான்,
போய்சும் வந்தார்கள்
எமக்கான விடுதலைதான் வரவில்லை.
வீதியெங்கும் விளம்பரப் பலகையும்
காதிலெங்கும் சமாதானப் பாடலுமாய்
விளங்குகின்றன நம் ஊர்கள்.
ஈழத்தமிழனே!
பட்டும் பட்டும் உனக்கேனடா புத்தி வரவில்லை.
ஒன்றில் போராடு
இல்லையேல் சரணாகதி அடைந்துவிடு.
இரண்டுக்குமிடையில் நின்று நசிந்து விடாதே.
உன் தாகத்துக்கு நிறைவான தண்ணீரை
எவரும் தரமாட்டார்கள்.
வாய் நனைக்க மட்டுமே வார்ப்பார்கள்.
நீ சொண்டைத்தான் நக்க வேண்டி வரும்.
பேய்களுக்கும் முனிகளுக்குமிடையே
பெரிய வேறுபாடுகளில்லை
ஒன்று கடிக்கும்
மற்றது அடிக்கும்.
எதிரே வருபவன் பலவானென்றால்
இரண்டுமே ஒன்றாகிவிடும்.
எரிகிற கூரையில் கொள்ளியெடுத்து
சுருட்டுப் பற்றவைத்தானாம் கிழவனொருவன்.
பக்கத்து வீட்டுக்காரனின் கதைதான்.
எமக்குப் பழைய கதையாச்சே.
உலகெங்கும் டெங்குக் காச்சலாம்
அவரொருவர் நுளம்புநாசினி விசுறுகின்றார்.
இறுதியில் நுளம்பு இங்குதானென்று
மகாபிரபு மருந்துடனும் வரலாம்..
வருபவர்கள் எல்லோரும் வரட்டும்.
முதலில் நீ முதுகிற் கூனலில்லாமல்
முற்றத்தில் நில்
உடுக்கடித்து ஆடப் பழகு.
தலையில் தலைப்பாகை கட்டு.
நறுக்குத் தெறித்தாற் போல
உன் வாயிலிருந்து வார்த்தைகள் வரட்டும்.
நீ திரும்பினால்
திசைகளும் உன்னோடு திரும்பட்டும்.
நீ பாடினால்
பட்ட மரத்திற்கூடப் பால் தெறிக்கட்டும்.
மழையுன் தோளின் கீழேயே பெய்யும்படியாய்
தலையை முகிலுக்கு மேலே வைத்திரு.
இத்தனைபேரையும் குழியில் விதைத்தது
தேர்தலில் நிற்க அல்ல.
தெருக்களைச் செப்பனிட அல்ல.
மாகாண சபையின் நிர்வாகமெடுத்து
மதவு கட்ட அல்ல.
வேண்டும் எமக்கு கூண்டில்லா வாழ்வு.
வேண்டும் எமக்கு விடுதலைக்கான சிறகு.
|
|
|
|
பணம் பணமறிய அவா
அன்னை தேசத்து
அகதிகள் நாம்
எண்ணெய் தேசங்களில்
எரிந்து கொண்டிருக்கிறோம்!
அடிவயிற்றில் பதிந்த
வறுமைக் கோடுகளின்
மர்மக் கரங்கள்
அறுத்தெரிந்து வீசிய
ஜீவனுள்ள
மாமிசத் துண்டுகள் நாம்!
கண் தெரியா தேசத்தில் விழுந்து
காயங்கள் தலை சாய்த்துக்
கண்ணீர் வடிக்கிறோம்!
மொத்தக் குடும்பத்தையும்
முதுகில் சுமந்து
இன்னும் தீர்மானிக்கப்படாத்
திசைகளில் தொடர்கிறது
நம் பயணம்!
ஒவ்வொரு முறையும்
நலம் நலமறிய அவா
என்றுதான் கடிதம் எழுதுகிறோம்!
பணம் பணமறிய அவா
என்றல்லவா பதில் வருகிறது!
நமக்கு மட்டும் ஏன்
பணம்
பந்த பாசங்களின்
சமாதியாகிவிட்டது?
ஒரு டெலிபோன் கார்டிலும்
ஒரு பொட்டலம் பிரியாணியிலும்
முற்றுப்பெற்றுவிடுகிறது
நம் பெருநாட்கள் ஒவ்வொண்றும்.....
உயிரை பிழிந்து பிழிந்து
பாசத்தால் ஒத்தடம் தந்த
உறவுகளைப் பிரிந்து
இன்னும் எத்தனை நாட்கள்
இந்த ஏகாந்த வாழ்கை?
கலவரத்தில்
கைக் குழந்தையைத் தொலைத்த
தாயின் பதற்றத்தைப்போல்தான்
ஒவ்வொரு முறையும் போன் பேசிய
பின்னால் அடையும் அவஸ்தைகள்......
நம்மில் பலருக்கு
தாம்பத்திய வாழ்க்கைகூட
தவணை முறையில்தான்
தட்டுப்படுகிறது.....
தொலைபேசியிலும்
தபாலிலும்
கொஞ்சலும், சிணுங்கலுமாய்...
இன்ஸ்டால்மெண்டில்
இல்லறம் நடக்கிறது...
மனைவியின்
மூச்சுக் காற்று தந்த சுகம்கூட
இந்த ஏசி காற்று தருவதில்லை!
குடும்ப விளக்குகளை
கும்மிருட்டில் தவிக்கவிட்டு விட்டு
தீக்குச்சிகள் நாம்
தன்னந்தனியாய்
இந்தத் தீவுகளில்...
வீடுகூடும் நிஜம் தொலைத்து
ஒரு வீடு கட்டும் கனாவில்
இன்னும் எத்தனை ஆண்டுகள்
இந்த பாலைப் பிரதேசங்களில்?...
உயிரோடு இருக்கும்
பெற்ற குழந்தைக்கு
புகைப் படத்தில்தான்
கொடுக்க முடிகிறது
செல்ல முத்தங்கள்!
என்ன இருந்தாலும்
காகிதங்கள் உணருமா
பாசத்தின் ருசி
ஒவ்வொரு முறையும்
ஊர் சென்று திரும்பும்போது
மறக்காமல் எல்லாவற்றையும்
எடுத்து வர முடிகிறது
மனசைத் தவிர...!
காலத்தின்
இந்த பசை தடவல்கள்
நம்மை கட்டிப்போடாமல்
வெறும் கடிதம் போடத்தானா?
பாலைவன ஜீவன்கள் நாம்
தாகத்தோடு காத்திருக்கின்றோம்!
தண்ணீருக்காக அல்ல
தபால்களுக்காக....
வாழ்க்கையின் பாதி
விரக்தியிலும், விரகத் தீயிலும்
எரிந்துபோகும் நம் வாலிப வாழ்க்கை
கடைசியில் நரம்புகள் அறுந்துபோய்
முகாரி பாடும் வீணைகளாய்...
என்ன சொல்லி
என்ன பயன்
தண்ணீரில் மீன் அழுதால்
கண்ணீரைத்தான் யார் அறிவார்?
எழுதியவர்:
கொடுவாயூர் ஜாஃபர்
சாதிக் பாகவி
|
|
|
|
கண்கெட்ட பயலைக் கண்டால் மடக்கவும்
நேற்றொரு "உலக்கையன்" ஊருக்குப் போய்
வந்தான்
போய் வந்து ... சொன்னான் ..
ஊரில் சனமெல்லாம் "சுதியாய்"
இருக்குதெண்டான்
"சுதி" எண்டால்..? கேட்டது நான்.
திருவிழா நடப்பதும்
தேருலாப் போவதும்
கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் யாவுமே ...
முன்பு போலவே மும்மரம் எண்டான்.
பொடி பெட்டை யாவரும்
"Tution"
போவதும்
இடைப் பட்ட நேரத்தில் புதுப்படம்
பார்ப்பதும்
சோடி பிடித்து பின்னலைந்து சுழட்டல்
செய்வதும்
வலு நேர்த்தி எண்டு ...
வாய் வழியச் சொன்னான் "சொதிவாயன்"
ஆமியைக் கண்டால் சனங்கள் சிரிப்பதும்
சனங்களைக் கண்டால் ஆமி சிரிப்பதும்
கண்கொள்ளக் காட்சி என்று ..
கண்ணுக்குள் விரலை விட்டான்
சோதனை யாகினும் விசாரணை ஆகினும்
"Sorry" சொல்லி செய்வதே
பழக்கம் ஆகையால் ..
படையினர் குறித்து பயமேதும் இன்றி ..
அடுக்கிக் கொண்டு அகலப் போனான்.
அப்போ .. சனங்கள் யாவரும் சுதந்திர
உணர்வுடன் உலாவரக் கண்டாய்?
விடுதலை பெற்றதாய் உணரக் கண்டாய் ..?
சினத்துடன் கேட்டேன்.
விடுதலை ... என்றால்..?
முளியைப் பிரட்டிக் கேட்டது அவன்
விளங்காப் பயல்
சோற்றுக்கு அலைகின்ற "சோத்து மாட்டுக்கு"
விடுதலைக் கெங்கே விளக்கம் தெரியும்?
சுதந்திர உணர்வின் சுகமெங்கே புரியும்?
நேற்றுத் தான் எனது தங்கச்சி... கிருசாந்தி
சிதைத்துப் புதைத்த வலியின் கொடுமையால்
கொதிக்கும் நெஞ்சில் ..
இன்னும் இன்னும் எத்தனை கொடுமை .
செம்மணிப் புதைகுழி புதைந்து மூச்சுத்திணற...
பிராணனை தேடும் உறவுகள் அங்கே.
தோண்டத் தோண்ட எங்கும் புதைகுழி ...
நூறு .. இருநூறு .. ஆயிரமாய் விரியும்
அவலங்கள்
அழுத்தும் பூமிப்பரப்பில்
சிரிப்பொலி எழுவதற்கு சாத்தியமுண்டா..?
கிருசாந்தி தொடங்கி .. சாரதாம்பாள் வரையும்
கசக்கி முகர்ந்த காமுகக் கூடாரத்தில்
வரவேற்பாம்
வணக்கம் வேறாம்.
கடலுக்குச் சென்று வலை விரிக்கவும்
வயலுக்குச் சென்று விதைத்தறுக்கவும்
கால நேரம் தூரம் கணிப்பது
அவனே ஆன பூமியில் ..
நமது தலைவிதி நம் கையில் உண்டா?
பாலியல் வதைகள் .. படுகொலை நிகழ்வுகள்
கைதுகள் .. காணமல் போதல்
புதைகுழி கொடுமைகள் ..
இன்னபிற அவலங்கள் .. யாவுக்கும்.
விசாரணை வேண்டுமென மடிப்பிச்சை
கேட்பதா தமிழன் நிலை.
எய்தவனிடமே அம்பை நோவென்பது
அபத்தம் .. அவலம்.
சோற்றை உருட்டி உருட்டி உள்ளே தள்ளி ...
உண்ட களைப்பில் விழுந்து படுத்து ..
மாலையில் எழுந்து படம் ஒன்று பார்த்து ..
பாட்டும் கூத்துமாய் காலம் கழித்தால்..
சுதந்திரம் வாழ்வின் சுகமெனக் கொள்வதா...?
இரத்தம் சூடேற .. கேட்டுத் திரும்பினேன்.
நிண்டவனைக் காணவில்லை.
கண்டால் மடக்கவும் .. கேள்விகளால்!
-எழுதியவர் யாரோ-
|
|
|
|
உலகம்
சிரியுங்கள்...
இந்த உலகம்
உங்களுடன் சிரிக்கிறது...
அழுங்கள்...
நீங்கள் மட்டுமே
அழுகிறீர்கள்...
பாடுங்கள்...
அந்த
மலைகளும் உங்களுக்குப்
பதிலளிக்கின்றன...
பெருமூச்செறியுங்கள்...
அவைக்
காற்றினில்
காணாமல் போகின்றன...
கொண்டாடுங்கள்...
உங்கள் வீட்டில்
ஓராயிரம் நண்பர்கள்...
கவலைப்படுங்கள்...
உங்கள் வீட்டில்
தூண்கள்கூட இல்லை...
வாழ்வின் அமுதங்களை
நாம்
எல்லோருடனும்
பங்கிட்டுக்கொள்ளலாம்...
ஆனால்-
நம்மின் சோகத்தை
நாம் மட்டுமே விழுங்கவேண்டும்...
விருந்தளியுங்கள்...
உங்கள் அறை
அமர்க்களப்படுகிறது...
கையேந்துங்கள்...
எங்கும்
மனிதர்களே
தென்படமாட்டார்கள்...
வாழ்வின் வெற்றி
உங்களை வாழச்செய்கிறது...
ஆனால்-
அதன் தோல்வி
உங்களை சாகடிப்பதில்லை...
ஆழப்பதியும்
அறிவுரை வழங்குகிறது...
இன்று வரும்
துயரங்களைக் கண்டு
ஓடி ஒளிந்தால்
நாளை
நம் முகவரி விசாரித்து வரும்
இன்பங்களை
யார் வரவேற்பது...?
நம்பிக்கை கொள்ளுங்கள்...!
அதுவே
எல்லாவற்றையும் வெல்லும்
அருமருந்து!
-புஹாரி-
|
|
|
|
|
கோபம்
உன்னை நானும்
என்னை நீயும்
விழுங்கிவிடுவதாய்க் கருதிய
எச்சரிக்கையின் இறுக்கங்களை
நம் முகங்களில் படரவிட்டு
ஒருவரையொருவர் நம்பாமலேயே
ஒரு நீண்ட பயணம் முடித்து
விரோதத்திற்கும் நட்பிற்கும் இடையே
நாம் விலகிநின்று
பரஸ்பரம் சிரித்துக் கொள்கையில்
கூடவே நம்மைப் பார்த்து
கைதட்டி சிரித்துப் போகும்
நாம் நழுவவிட்ட காலங்களும்!
-யாரோ-
|
|
|
|
|
எங்களின் நாட்கள்
அஸ்தமனத்தை அறிவிக்கும் எங்கள் அதிகாலைகள்
பூபாளத்திற்கு பதிலாக முகாரியையே
முன்வைக்கும்
பூமியில் கேட்கும் முழக்கங்களால்
மேகங்கள் மோதிக்கொள்வதை நிறுத்தி
வாய்பொத்தி நிற்கும்
துரத்திக்கொண்டுவரும் துப்பாக்கி ரவைகளால்
தென்றல் காற்று கிழிபடும்.
'ஷெல்'லக்குழந்தைகள் மனித பொம்மைகளின்
அங்கங்களை கழற்றி விளையாடும்
பொட்டிழந்த எங்கள் பெண்ணிலவுகளை
சோக மேகங்கள் ஆக்கிரமித்துக்கொள்ள
அமாவாசை அவர்களிடம் நிரந்தரமாகும்.
குருதியலைகள் மோதிப் பாய்ந்து கீழ்வானை
சிகப்பாக்கும்
-விவேக்-
'தடயங்கள்' கவிதைத் தொகுப்பிலிருந்து
|
|
|
|
|
வழமையான செய்திகள்
மனித நேயம் எங்கோ
பதுங்கிக்கொண்டபோது - வெறும்
மண்டை ஓடுகளே இங்கே விதைக்கப்பட்டன
பூவும் கொடியுமாய்ப்
பூத்துப்பொலிந்த - எங்கள்
கிராமத்து மண்ணிலெல்லாம் - இன்று
எருக்கலை மட்டும் பூத்திருக்கு!
பச்சை மரங்கள்
காற்றசைவில் படபடக்ககூட
அச்சப்பட்டு வாழ்கின்றது
எங்கள் அயலட்டம்..
இருண்டுவிட்ட தெருவோரத்தில்
இரவிரவாய்த் 'தேடுதல்'நடக்கும்
இங்கொன்று அங்கொன்றாய்
எம்மவர் காணாமல் போவர்...
தேசத்தின் பிறிதொரு மூலையில்
அடையாளம் காணப்படாதவர்களாக
புலிச் சின்னம் பொறித்து - அவர்கள்
புதைக்கப்படுவார்கள்
தேசம் 'வழமைக்குத் திரும்பியதாக'
தெற்கில் செய்தி வரும் - ஆம்
இவைகள் தான் வடக்கிலும் கிழக்கிலும்
வழமையான செய்திகள்
தனேஸ்-
நன்றி: மாணவர் முரசு
|
|
|
|
|
ஒரு ஞாயிறு மாலை
ஒரு ஞாயிறு மாலை ய(ஜ)ன்னல் அருகிலிருந்து
அ(ஆ)ப்பிள் மரத்தில் அணில் கோதும் அழகில்
லயித்து இருந்தேன்
சின்ன உடலில் என்ன வேகம் சிலிர்ப்பும்
வாலின் விசுக்கலும் விடுவிடென
அங்குமிங்கும் நோக்கலும் செயலில்
முனைப்பும்
ஒரு சில கொறிப்பின் பின் பயனற்ற உதிர்வில்
எத்தனை பிஞ்சுகளோ...?
லயிப்பில் இழப்பின் நெருடலும்
தொலைவில் அப்போது அந்தச் சத்தம் முதலில்
மெல்ல பின்சற்றுப் பலமாய் ஓம்! ஹெலியேதான்!
"
ராணி பிள்ளைகளைக் கொண்டு பங்கருக்குள் ஓடு
ஒரு கணச் சுதாகரிப்பில் இருப்பின் தெளிவில்
நிம்மதிப் பெருமூச்சு
சே எத்தனை ஆயிரம் மைல்கள் தாண்டி
எங்கிருந்தாலென்ன பிரக்ஞையற்ற கணங்களில்
அந்தச் சத்தம் என்னமாய் மனதை உலுக்கி
எடுக்கிறது
அணிலின் அழகும் லயிப்பும் எங்குபோய்
ஒழிந்தன
-மு புஷ்பராஜன்-
நன்றி: சுபமங்களா
|
|
|
|
|
தரிசனம்
நிலாவைக் காட்ட நீண்டது விரல்
எவ்வளவு அழகான விரல்' என்றான் ஒருவன்
'நகம் முத்துச்சிப்பியைப்போல் இருக்கிறது'
என்று கவிதை புனைந்தான் ஒருவன்
அது ஒன்றுக்குப்போகவேண்டும் என்கிறது'
என்றான் ஒருவன்
'இல்லை அது அதட்டுகிறது' என்றான் ஒருவன்
ஒரு மோதிரம் கொண்டுவந்து போட்டான் ஒருவன்
மருதாணி தடவினான் ஒருவன்
ஞாபக முடிச்சிட்டான் ஒருவன்
விரலின் ரேகைகளில் பயணம் செய்தார்கள் சிலர்
பிறகு-விரல் வெட்டியெடுக்கப்பட்டு
பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ஆரம்பமாயின வழிபாடுகள்
ஆனால் யாரும் பார்க்கவில்லை நிலாவை
-அப்துல் ரகுமான் -
|
|
|
|
|
என்னைக் கவர்ந்த எழுச்சிப்பாடல் ஒன்று
மாங்கிளியும் மரம்கொத்தியும் கூடு
திரும்பத் தடையில்ல
நாங்க மட்டும் உலகத்தில நாடு திரும்ப
முடியல
சிங்களவன் படை வானில் நெருப்பை அள்ளி
சொரியுது
எங்கள் உயிர் தமிழீழம் சுடுகாடாய் எரியுது
தாய் கதறப் பிள்ளைகளின் நெஞ்சுகளை
கிழிக்கிறான்
காயாகும் முன்னே இளம் பிஞ்சுகளை
அழிக்கிறான்
பெத்தவங்க ஊரிலே ஏங்குறாங்க பாசத்தில
எத்தனை நாள் காத்திருப்போம் அடுத்தவன்
தேசத்தில
உண்ணவும் முடியுதில்ல உறங்கவும்
முடியுதில்ல
எண்ணவும் முடியுதில்ல இன்னும்தான்
விடியுதில்ல
கிட்டி பொல்லு அடிச்சு நாங்க விளையாடும்
தெருவில
கட்டி வைச்சு சுடுகிறானாம் யார் மனசும்
உருகல
ஊர் கடிதம் படிக்கையில விம்மி நெஞ்சு
வெடிக்குது
போர்ப் புலிகள் பக்கத்தில போக மனம்
துடிக்குது.
நன்றி: கவிஞர்
காசியானந்தன்
|
|
|
|
|
உறைந்த நினைவுகள்
மலரென்று உனை எண்ணி மனதினில்
வைத்திருந்தால்
பிரிவென்று வரும்போது
பெருந்தணலாய்ச்சுடுகின்றாய்
கூடி இருக்கையிலே
குளிர்நிலவாய்த்தானிருந்தாய்
பக்கம் இல்லாது பகலவனை மிஞ்சுகின்றாய்
கோடைகாலங்கள் இன்னல் பல தருகையிலே
வசந்தமாய் உன் நினைவு வந்து வந்து
போகின்றது
காரிருள் என் மீது கவிழ்ந்து கிடக்கையிலே
விளக்காய் வெளிச்சம் தந்து வேறெங்கோ நீ
மலரோடு மரங்கள் அழகாகத்தானிருக்கும்
வேர்கள் இல்லையெனில் அது விறகாகிப்
போயிருக்கும்
உன் நினைவு எப்போதும் எனக்குள்ளே
உறைந்திருக்கும்
அது சுத்தமான காற்றாகி என் சுவாசம்
நிறைந்திருக்கும்
யாரோ
|