|
2007ம் ஆண்டில் அமெரிக்க இலத்திரனியல் உலகை, குறிப்பாக இலத்திரனியலின்பால்
இயைந்து செயற்பட மட்டுமே பழக்கப்பட்டுவிட்ட இளையவர் உலகை
ஆக்கிரமித்துக்கொண்ட நவீன உபகரணமாக, ஐஃபோன் (iPhone)
அறிமுகமாகியிருக்கிறது.
2008ம் ஆண்டின் ஆரம்பத்தில், கனடிய இலத்திரனியல் இதயநாளங்களைப் பரீட்சிக்க
அதிரடியாக இந்த ஐஃபோன்கள் களமிறக்கப்படவுள்ள நிலையில், இதன்
ஈர்ப்புசக்தியாக இன்ப அதிர்ச்சி தரும் தார்ப்பரியங்களை சுருக்கமாக ஆராய்வதே
இந்தக் கட்டுரையின் நோக்கம்.

கணினி உலகில், மைக்ரோசொஃப்ற் நிறுவனத்திற்கும், ம்மக் (Mac) என்று தற்போது
அறியப்படும் மக்கின்ரோஸ் (அப்பிள்) நிறுவனத்திற்கும் எப்போதும்
இலத்திரனியல் போட்டாபோட்டி தொடர்ந்தபடியே இருக்கிறது. சாதாரண நாளாந்த
பாவனையாளர்கள் மற்றும் பொது அலுவலக
செயற்பாடுகளை மிக அதிகமாகக் கவர்ந்து வார்ந்திழுக்கும் நிறுவனமாக
மைக்ரோசொப்ற் தொடர்ந்தும் இனம்காணப் பட்டாலும், பல்வேறு துறைசார் உயர்மட்ட
நிறுவனங்கள் மற்றும் துறைசார் விற்பன்னர்களிடம், மக்கின்ரோஸ் உபகரணங்கள்
தொடர்ந்தும் மவுசுடனேயே வலம்
வருகின்றன.
அவ்வப்போது மைக்ரோசொஃப்ற் நிறுவனம், தனது அதிரடி அறிமுகங்கள் மூலமும், ஏனைய
சிறிய இலத்திரனியல் உபகரணங்களை அறிமுகம் செய்யும் நிறுவனங்களை, அவர்களது
கண்டுபிடிப்புகளுடன் சேர்த்து கொள்வனது செய்து விடுவதன் மூலமும்,
வடஅமெரிக்க இலத்திரனியல் உலகை தம்வசம் காத்திரமாக வைத்திருக்கின்றது.
இருந்த போதிலும், அப்பிள் (மக்கின்ரோஸ்) நிறுவனமும், தனது பங்கிற்கு
அவ்வப்போது தான் அறிமுகம் செய்யும் உபகரணங்களை, தரமாகவும் தேவை
கருதியதாகவும் நிறைந்த செயல்திறன் கொண்டதாகவும் கவர்ச்சியானதாகவும்
உருவாக்கி வெளிவிடுவதன் மூலம், இலத்திரனியல் உலகில் தனது பெயரையும்
கவனத்தையும் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பதே
உண்மை.
இதன் ஒரு கட்டமாக, சென்ற வருடம் இலத்திரனியல் உலகை, அதிலும் குறிப்பாக
தொடர்பாடல் சார்ந்த அத்தனை விடயங்களையும் உள்ளடக்கி விடக்கூடிய ஒரு மிகத்
தரமும் தகுதியும் செல்வாக்கும் கவர்ச்சியும் நிறைந்த ஒரு உபகரணத்தை,
மக்கின்ரோஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது.
ஏற்கனவே ஐப்பொட் (iPod) என்ற தொடர்பாடல் உபகரணம் பாவனையிலிருந்தாலும், அதன்
பாவனைத் தேவை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
ஐப்பொட் பாவனையாளர்கள், அதிகமாக இசையை ரசிப்பதற்காக மட்டுமே அந்த
உபகரணத்தைப் பயன்படுத்தி வந்தார்கள். அப்பிள் நிறுவனத்தால் 2001ல்
வெளியிடப்பட்ட இந்த ஐப்பொட் உபகரணம், தானாகவே பாடல்களைத் தேடிப்
பதிவுசெய்து, தன்னை மீளமைப்புச் செய்து
இயங்கக்கூடியதாக செயற்பட்டது. அதாவது, ஒரு ஐப்பொட் உபகரணத்தை, கணினியில்
தொடர்பு படுத்தியதும், அது தானாகவே கணினியுடன் பரிமாற்றங்களை மேற்கொண்டு,
தனக்குள் சேமித்திருக்கும் பாடல்களையும், கணினியில் காணப்படும்
பாடல்களையும் ஒப்பீடு செய்து, புதியவற்றை அல்லது மாறியவற்றை மீண்டும்
தனக்குள் சேமித்து, தன்னை அகவரிசைப்படுத்தி, தானாகவே தன்னைத்
தயார்படுத்திக் கொள்ளுகின்ற தன்மை வாய்ந்தது. பி.சி. அல்லது மக்கின்ரோஸ்
என்ற இருவகை கணினி அமைப்பிலும் தானாகவே இயங்கும் தன்மை கொண்ட இந்த ஐப்பொட்
உபகரணம், பாவனையாளர் தன்னோடு அதை எப்போது எடுத்துச் சென்றாலும், உலகில் மிக
இறுதியாக வெளியான அத்தனை பாடல்களையும் தானாகவே தனக்குள் ஏற்றிக்கொண்டு,
தனது பாவனையாளருக்காக புதிய இசையுடன் காத்திருக்கும் தன்மை கொண்டது.
இதனால், இளையவர் இசை ரசனையை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்துவதற்கு இந்த
ஐப்பொட் மிகவும் உதவியதென்றே சொல்லலாம்.
வாக்மென் எனப்படும் நடமாடும் இசைக்கருவியில் தாம் விரும்பிய இசையைக் கேட்டு
ரசிப்பதற்கு, உரிய ஒலித்தட்டை (Audio Cassette) அல்லது நெகிழ்வெட்ட
(floppy) அல்லது வன்தட்டை (சி.டி.) அங்கும் இங்கும் தேடியலைந்து, இரண்டாம்
மூன்றாம் தரப்பினர் திருடி வெளியிடும்
பலவற்றையும் உண்மையான முதல்தர இசைக் கோப்புகளென நம்பி ஏமாறும் இளையவர்
பலருக்கு, ஐப்பொட் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக காட்சியளித்தது.
ஆனாலும், ஐப்பொட் என்ற உபகரணத்தை மேலதிகமாகக் காவிச் செல்லுகின்ற ஒரு தேவை
உருவானதால், ஏற்கனவே காவிச் செல்கின்ற கைத்தொலைபேசி, கைத்தொலைபேசிக்கான
'புளுருத்' (Bluetooth) கருவி, நடமாடும் கணினியான லாப்ரொப், முகவரி மற்றும்
தொலைபேசி
இலக்கங்களைச் சேமிக்கும் 'பாம் பைலட்' என்ற உபகரணம், ஃபோட்டோ கமரா, வீடியோ
கமரா, 'பேஜர்' எனப்படும் தொடர்பாடல் கருவி என்று இன்னோரன்ன பல உபகரணங்கள்
சேர்ந்து, மிகப்பெரும் தலைவலியாக பாவனையாளர்களைத் தொந்தரவு செய்தன. அங்கும்
இங்கும்
தொலைத்துவிட்டு தேடுவதிலிருந்து, அனைத்தையும் காவிச்செல்வது உட்பட,
ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான மாதாந்த செலவுகள் மற்றும் இயந்திரக் கோளாறுகள்
என்று பல தொல்லைகள், பாவனையாளர்களை வாட்டின.

இவற்றையெல்லாம் தெளிவான ஆய்வுகள் மூலம் இனம்கண்டுகொண்ட கணினி ஜாம்பவானான
அப்பிள் நிறுவனம், தனது மக்கின்ரோஸ் வகையின் கீழ், அனைத்தும் ஒன்றாக
உருமாறக்கூடிய புதிய உபகரணத்திற்கு வழி தேடியது. இதன் தீர்வாக
வெளிவந்திருப்பதுதான் இந்த ஐஃபோன் என்றால் அது மிகையாகாது.
ஐஃபோன்
சுருக்கமாகச் சொன்னால், இலத்திரனியல் உலகின் அனைத்து தொடர்பாடல்
தேவைகளையும், பாவனைகளையும் ஒன்றாகச் செய்துவிடுவதற்கு ஏதுவாகப்
பிறப்பெடுத்திருக்கும் ஒரு நவீன அதிர்ஷ்ட தேவதையே இந்த ஐஃபோன்கள்.
- கையடக்க தொலைபேசி
- முகவரி சேமிப்பான்
- தொலைபேசி இலக்க சேமிப்பான்
- தகவல் சேமிப்பான்
- இசைக்கருவி
- பாடல் சேமிப்பான்
- வீடியோ காட்சிகள் சேமிப்பான்
- தொலைக்காட்சி சேவைகளைப் பார்ப்பது
- திரைப்படங்கள் பார்ப்பது
- மின்னஞ்சல் பெறுவது, அனுப்புவது
- கணினிப் பாவனை (கடிதம் எழுத, சேமிக்க)
- இணையத்தள பாவனை
- இணைய தேடுதள பாவனை
- வீதி விபரங்களை அறிந்து கொள்ளல்
- ஒலி மூலம் இயக்குதல்
- புகைப்படங்களை (ஃபோட்டோ) அல்லது வீடியோ படங்களை எடுத்தல்
என்று இன்னோரன்ன அத்தனை தேவைகளையும் ஒரு கருவியில் செயற்படுத்தும் வகையில்
புதுப்பிறப்பெடுத்து வந்திருக்கிறது இந்த ஐஃபோன் கருவிகள்.
மிக அழகான பல்வேறு வடிவங்களில், 3.5 அங்குல உரைச்செயலியுடன் (monitor or
screen) ஒற்றை அழுத்தலில் பல விடயங்களைச் செய்துவிடக்கூடிய மிக நவீன
இலத்திரனியல் இயங்கு சக்தியுடன் இந்த ஐஃபோன்கள் வெளிவந்துள்ளன. வெறும் 135
கிராம் எடையை மட்டுமே கொண்ட இந்தக் கருவிகள், 4.5 அங்குல உயரமும் 2.4
அங்குல அகலமும் 0.46 அங்குல தடிப்பும் கொண்டதாக (4.5 x 2.4 x 0.46 inches
115 x 61 x 11.6mm) மிகவும் கையடக்க அளவில் வெளிவந்துள்ள.
இவற்றின் இன்னும் பல வரப்பிரசாதங்களாக:
- உலகின் எந்த மூலை முடுக்கிலும் இதை ஒரு தொலைபேசியாகவும் கணினியாகவும்
பயன்படுத்தும் தரமும் வாய்ப்பும்
- சபாரி (Safari) மேய்ப்பான் (browser) உட்பட, இன்ரநெற் எக்ஸ்புளோரர்,
நெற்ஸ்க்கேப், பயர்ஃபொக்ஸ் போன்ற அத்தனை மேய்ப்பான்களையும் பாவிக்கும் வசதி
- பி.சி. (PC) அல்லது ம்மக் (Mac) என்ற இருவகை கணினியிலும் பயன்படுத்தும்
தன்மை
- உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், மின்னஞ்சல் மற்றும் இணையத்தள
தொடர்புகளைக் கொண்டிருப்பது
- அனைத்து மின்னஞ்சல் சேவைகளையும் பாவிக்கும் தன்மை (ஹொட்மெயில், ஜிமெயில்,
யாகூ, மெயில், ஏ.ஓ.எல்., மக்மெயில் போன்றவை உட்பட அனைத்தும்)
- ஒரே நேரத்தில் பல செயற்பாடுகளை முன்னெடுக்கும் தரம் கொண்டதாக இருப்பது,
அதாவது பாடல்களைக் கேட்டபடி, மின்னஞ்சல்களைப் பார்வையிடுவது, அதேவேளை
இன்னுமொரு புதிய திரைப்படத்தை இணையத்தளத்திலிருந்து தரவிறக்கம் (download)
செய்துகொண்டிருப்பது
- மைக்ரோசொஃப்ற் புதிதாக அறிமுகம் செய்திருக்கும் விஸ்ரா இயங்குதள செயலி
(Operating System) உட்பட, எக்ஸ்.பி., மக்ஸ் ஓ.எஸ்.எக்ஸ் மற்றும் அனைத்து
சேவைகளிலும் இதைப் பயன்படுத்தும் வாய்ப்பு
- ஏற்கனவே பாவித்துவரும் கைத்தொலைபேசி உட்பட, அனைத்து உபகரணங்களிலும்
சேமிக்கப்பட்டிருக்கும் அத்தனை தகவல்களையும் இலகுவாக ஐஃபோனிற்கு
மாற்றிவிடும் வாய்ப்பு
- கணினியில் பொருத்தியிருக்கும்போது, தானாகவே செயற்பட்டு, மின்னஞ்சல்
முகவரிகளை மீள்பரிமாற்றம் செய்து, புதியவற்றை தானாகவே சேமித்துக் கொள்ளும்
திறன்
- கைத்தொலைபேசிக்கான அதே 'புளுருத்' (Bluetooth) கருவிகளை, ஐஃபோனிலும்
பாவிக்கும் திறன்
- அனைத்து விடயங்களையும், ஒரு விரலைப் பாவித்து தொட்டு அல்லது அழுத்தி,
செயற்படுத்தும் வகையில் மிகநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப் பட்டிருப்பது
- ஐஃபோன் வைத்திருக்கும் ஒருவர் என்றதால் மட்டுமே கிடைத்து விடுகின்ற
கௌரவமும் புகழும்
என்று நிறைய வசதிகளை அடுக்கிச் செல்லலாம்.
இவை அனைத்தையும் தவிர, இத்தனை சேவைகளை உள்ளடக்கிய இந்தக் கருவியை, மிகச்
சிறியதாக, கையடக்கமாக உருவாக்கியிருப்பதன் மூலம், சாதாரணமாக எங்கு
வேண்டுமானாலும் கையில் வைத்துக்கொண்டே பாவித்துவிட்டுச் செல்லக்கூடிய ஒரு
அற்புதமான இலத்திரனியல்
உபகரணமாக இது உருவெடுத்திருக்கிறது.
ஐஃபோன் (iPhone) என்ற இந்தக் கருவி பற்றிய முதற்கட்டத் தகவல்களை, 2007ம்
ஆண்டு ஜனவரி 9ம் திகதி இடம்பெற்ற மக்கின்ரோஸ் (அப்பிள்) நிறுவனத்தின்
வருடாந்த வர்த்தக மாநாட்டின்போது, அந்நிறுவனத்தின் அதிபர் ஸ்ரீவ் ஜொப்ஸ்
வெளியிட்டார். சர்வதேச இலத்திரனியல் மற்றும் கணினி உலகம், மிகுந்த ஆவலுடன்
இந்த ஐஃபோன் உபகரணத்தை எதிர்பார்க்க ஆரம்பித்தது.
2007ம் ஆண்டு யூன் மாதம் 29ம் திகதி, மிகுந்த பரபரப்பிற்கு மத்தியில்,
அமெரிக்காவில் ஐஃபோன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தக் கருவி, வர்த்தக
சந்தையில் நுகர்வோரிடம் விற்பனைக்கு வந்தபோது, முதல் 30 மணித்தியாலங்களில்
270,000 கருவிகள் விற்பனையாகின. இவற்றில்
146,000 கருவிகள், அதே 30 மணித்தியாலங்களினுள் தொலைபேசி சேவை
நிறுவனங்களுடாக தொடர்பாடல் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டன. சென்ற வருடம்
செப்ரம்பர் 10ம் திகதி, 1 மில்லியன் ஐஃபோன்கள் விற்கப்பட்டிருப்பதை அப்பிள்
நிறுவனம் உறுதிசெய்தது. ஒக்ரோபர்
22ம் திகதி இந்நிறுவனம் வெளியிட்ட தகவல் குறிப்பில், 1.36 மில்லியன்
கருவிகள் விற்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 2008ம் ஆண்டு
நடுப்பகுதிக்குள், மொத்தம் 10 மில்லியன் ஐஃபோன் கருவிகள் விற்றுவிடும்
என்று, நிறுவன அதிபர் ஜொப்ஸ் ஆரூடம் கூறியிருக்கிறார்.
2007ம் ஆண்டு நொவம்பர் மாதத்தில், இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய
நாடுகளில் வெளியிடப்பட்ட ஐஃபோன் கருவிகள், ஏககாலத்தில் உச்சக்கட்ட
விற்பனையைப் பதிவுசெய்தன. 2008 மே மாதத்தில், சீனா, ஸ்பெயின் உட்பட, மேலும்
பல நாடுகளில் ஐஃபோன்கள்
உத்தியோகபூர்வமாக களமிறக்கப்படவுள்ளன.
2007 இறுதியில், கனடாவில் ஐஃபோன்கள் வந்துவிடுமென நம்பிக்கையுடன்
எதிர்பார்க்கப்பட்ட போதிலும், வர்த்தக ஒப்பந்தம் மற்றும் தொழில்நுட்ப தரம்
போன்றவை காரணமாக, 2008 ஆரம்பம் வரை கனடாவில் ஐஃபோன்கள் உத்தியோகபூர்வமாக
பாவனைக்கு வர வாய்ப்பில்லை
என்று அறிவிக்கப்பட்டது.
ஐஃபோன் ஆர்வலர்களான இளையவர்களுக்கு, கனடாவில் ஐஃபோன் பாவனை இல்லாதிருப்பது
வேப்பங்காயாக கசக்கிறது. கனடிய இளையவர்கள் பலரும், பொறுமையிழந்தும்
கோபமடைந்தும், இருப்புக் கொள்ளாமலும், அமெரிக்காவிலிருந்து திருட்டுத்தனமாக
அல்லது இரகசியமாக இந்த ஐஃபோன்களை அதிக விலைகொடுத்து வாங்கி
வைத்திருக்கிறார்கள். ஐப்பொட் கருவி போன்று, பாடல்களை ரசிக்க முடிவதுடன்,
மேலதிகமாக வீடியோ காட்சிகளை ரசிக்க முடிந்தாலும், தொலைபேசி சேவையை கனடாவில்
ஐஃபோன் கருவிகள் பெறுவதற்கு இன்னும் வாய்ப்புக்கள் உருவாகவில்லை.
கனடாவில், ஐஃபோன் கருவிகளுக்கான தொலைபேசி சேவை ஒப்பந்தத்தை, றொஜேர்ஸ்
(Rogers) நிறுவனம் பெற்றுள்ளது. கனடாவில், றொஜேர்ஸ் சேவை தெளிவாக சிறப்பாக
இயங்கும் சில பிரதேசங்களிலும் மாகாணங்களிலும், ஐஃபோன் ஆர்வலர்கள்
மகிழ்ச்சியடைந்தாலும்,
றொஜேர்ஸ் சேவை அதிக வரவேற்பைப் பெறாத பல பகுதிகளிலுள்ள பாவனையாளர்கள்,
மிகவும் அதிருப்தியும் கோபமும் அடைந்திருப்பது உண்மைதான்.
இந்த ஐஃபோன் கருவிகள் உத்தியோகபூர்வமாக கனடாவில் இவ்வருட முற்பகுதியில்
வந்துவிடுமென்ற நம்பிக்கையை மட்டுமே சுமந்தபடி, கனவுலகில் மிதந்து திரியும்
இளையவர்களின் ஆத்ம திருப்தியை நிறைவு செய்ய, எந்த நேரத்திலும் ஐஃபோன் கனடிய
மண்ணில் சட்டப்படி
பிறப்பெடுக்கலாம்.
(குறிப்பு:
2008ம் ஆண்டுக்கான 'தமிழர் தகவல்' ஆண்டு மலரில் வெளியான கட்டுரை. பெப்ரவரி
17ம் திகதி, கனடா ரொறன்ரோவில் இந்த 17வது ஆண்டு விழா இடம்பெற்றபோது,
பசுமையான அகவை பதினேழு மலரும் வெளியானது. ஆசிரியர் திரு.எஸ்.திருச்செல்வம்) |