| |
|
|
 |
| |
9. வாழ்த்துரைகள் - 4 |
|
| |
ஓர் ஆச்சர்ய விருந்தாளி
அலோ...
"..................."
ஆமா...நாந்தான் பேசுறேன்.
"........................."
அப்படிங்களா?
"................................."
ஆச்சரியமா இருக்கு.. என்னால நம்ப முடியலை..
"................................................."
எப்ப வர்றாங்க?
"..................................."
இன்னும் அஞ்சே நிமிசத்திலேயே....ஓ! மை....... அப்டியா... தீடிர்னு
வர்றாங்கன்னு சொன்னதும் எனக்கு கையும் ஓடலை.. காலும் ஓடலை....!
என்னங்க இவ்வளவு தலை தெறிக்க ஓடுறீங்க என்று மணியம் என்னைக்
குறுக்கிட்டுக் கேட்டார்? விசயத்தைச் சொன்னதும் அவரும்
பரபரப்பாகிவிட்டார். தொண்டர்படையை அவசர அவசரமாக அணிவகுத்து நிற்கச்
சொல்லி அவர்களுக்கு எப்படி நடந்து கொள்ல வேண்டும் என்று சொல்லி
முடித்துவிட்டு ஒலி வாங்கியருகே போய்," இன்னும் சிறிது நேரத்தில் நம்
இந்திய" ......" அவர்கள் வரப் போகிறார்கள். நம் கவிஞரை அவர்கள் இரண்டு
நிமிடம் வாழ்த்திப் பேச இந்த இனைய விழாவிற்கு வருகை தர இருக்கிறார்கள்
என்ற அறிவிப்பைச் சொல்லி முடிக்கும் முன் திடீரென்று ஒரே நேரத்தில்
ரெண்டு மூன்று ஹெலிகாப்டர்கள் பறந்து வரும் ஓசையைக் கேட்க கண்மூடிக்
கண் திறக்கும் முன்பு நின்ற ஹெலிகாப்டரிலிருந்து ஆஜானுபாகுவாக இறங்கி
வந்தார்! அடடே அந்தக் கம்பீரம்! அந்த நடை! அவர் முகத்தில் தவழும்
புன்னகை! முன்நெற்றியில் கேசங்கள் சற்றே புரண்டு விழ....சுற்றிலும்
கமாண்டோக்கள் புடை சூழ மேடையினை நோக்கி அந்தத் தலைவர் வர.... கரவொலிகள்
இணைய விண்ணைப் பிளக்க அவரை அழைத்துக் கொண்டு மேடை ஏற, மாலன்
எதிர்கொண்டழைக்க, புகாரி முகமெல்லாம் புன்னகைப் பூக்கள் சிதறியிருக்க
ஒலி வாங்கி முன் வந்து நின்றார்! அவர்....
இந்தியக் குடியரசுத் தலைவர்!
பேசத் துவங்கினார். எறும்பு கீழே விழுந்தாலும் சத்தம் கேட்கும். அவ்வலவு
துல்லியமான அமைதி! "தமிழ் உலக ஆஸ்தானக் கவிஞருமான புகாரி அவர்களின்
கவிதை நூலான "அன்புடன் இதயம்" நூல் வெளியீட்டு விழா தமிழ் உலக இணையப்
பந்தலில் நடப்பதை சற்று முன் அறிந்தேன். அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன்;
இது புகாரிக்கு கிடைத்த பெருமையா? இல்லை. தமிழுக்கு கிடைத்த பெருமை!
அவர் இந்த நூலில் என்னைப்பற்றி எழுதியிருக்கிறார், எழுபது வயது தாண்டிய
இந்தக் கிழவனை அவரின் பனிரெண்டாம் குடியரசுத் தலைவர் கவிதையில் இளைஞன்
என்று வர்ணித்தார் என்பதற்காக நான் இங்கு வாவில்லை. ஆண்டியிலிருந்து
அரசன் வரை, சாதாரண சாமியாரிலிருந்து பெரிய யோகி வரை நபிகள் (அல்)
நாயகம் முதல் இயேசு... புத்தர் போதித்த அன்பைக் கவிஞர் கையிலே
எடுத்துக் கொண்டு எளிமையாகச் சொல்லியிருக்கும் விதத்தைப் பாராட்ட இந்த
மேடையை விட ஒரு இடம் இருக்காது என்பதற்காகத் தான் நான் இங்கு வந்தேன்.
இளைஞர்களால்தான் இந்தியாவுக்கு விமோச்சனம் என்று நான் வலியுறுத்தி
வருகிறேன். அந்த வகையில் என் கண்ணில் பட்ட இந்த புகாரியும் இளைஞர்!
நம்மிடையே ஒரு பாரதியோ, பட்டுக்கோட்டையோ இல்லை என்ற குறையைப் போக்க
வந்த இவ்விளைஞரை மனமாற, வாயாற வாழ்த்தி உங்கள் அளப்பரிய கவிதைப் பணியை
தொடர்ந்து ஆற்றுங்கள் என்று கேட்டுக் கொள்வதற்காக வந்தேன். என் வேலை
முடிந்து விட்டது. இந்த புகாரி என்னும் யுக பாரதியை மீண்டும் வாழ்த்தி,
இந்த இணைய விழாவைப் புதுமையாக நடத்தி புரட்சி புரியும் நண்பர்களையும்
வாழ்த்தி, எனக்காக இந்த விழா முடிவைச் சற்று நகர்த்தியமைக்காகவும்
நன்றி தெரிவித்து விடை பெறுகிறேன். எல்லோருக்கும் வணக்கம்!
( கரஒலிகள்......கரஒலிகள்......கரஒலிகள்....நிறுத்தாமல் தொடர்ந்து
கொண்டிருக்க...)
பேசி முடித்ததும் அருகிலிருந்த புகாரியை ஆரத் தழுவி காதில் ஏதோ
கிசுகிசுத்தார். புகாரி நெளிந்தார்..கூச்சத்தாலா? பிறகு அவரைக் கேட்க
வேண்டும். விடுவிடுவென்று விரைந்து நடந்து ஹெலிகாப்டரில் ஏறினார்.
கொஞ்ச நேரத்தில் வந்த சுவடு தெரியாமல் திரும்பியும் விட்டார்!
கவிஞர் குடியரசுத் தலைவர்பற்றி எழுதிய கவிதை!
பனிரெண்டாம் குடியரசுத் தலைவா
ஓ
வைர விதையே
எங்கள் அப்துல் கலாம்
ஒரு பனித்துளி
தென்னிந்திய
புழுதிப் புல்வெளியிலிருந்து
உயரே உயரே எழுந்து எழுந்து
ஆதவ நெற்றியில்
அழகு முத்தம் தந்த
சரிதையோ உன் சரிதை
O
ஒரு
சின்னத் தேன் சிட்டு
தன் சிறகால் வான் தொட்டு
கோள்களையெல்லாம்
சோற்றுப் பருக்கைகளாய்க்
கொத்தித் தின்னும்
திறமையோ உன் திறமை
O
எழுத்தாணி முனையினைப் போல்
கூரேறி நிற்கும்
எழில் இராமேஸ்வரம் ஈன்றெடுத்த
தங்கத் தமிழனே
உன்னை
விதைத்த வனத்திலெல்லாம்
உச்சிச் சூரியனின்
உயர் மூச்சுக் காற்று
உஷ்ணமாய் வியாபிக்கிறது
O
சூழும் சூனியங்களைச்
சுட்டெரித்து நிற்கும்
உன்
மனத்திண்மையும்
மூளைத்திடமும் கண்டு
நான்
நகக்கூச்செறிகிறேன்
O
சாட்டை சொடுக்கச்
சுற்றும் பம்பரம்போல்
உன் ஒவ்வொரு செயலும்
வெற்றியின் பாதையில்
வீறுகொள்வதெப்படி
O
குஞ்சுகளைக் காக்க
சிறகுகளை விரித்து
சிலிர்த்துக்கொண்டு நிற்கும்
தாய்க் கோழி கூட
ஒரு கணம் சக்திகெட்டு
ஒன்றிரண்டு குஞ்சுகளை
பருந்துக்குப் பலிகொடுக்கும்
நீயோ
இந்தியாவின்
முட்டை ஓட்டில்
எந்தத் தூசும் தொட்டுவிடாமல்
அரண் அமைக்கும் வித்தையில்
அதிசயத்தைக் கண்டுவிட்டாய்
O
ஐயனே
எங்களை ஆள வந்த
மெய்யனே
எழுபதைத் தொட்டும்
முதுமையைத் தொடாத
இலக்கிய இளைஞனே
வீணையின் நரம்புகளோடு
சேர்ந்தே அதிர்ந்து
நாதம் எழுப்பும் பூமனத்தோனே
எழாமலும் விழாமலும்
எந்நேரமும் பணிக்குள்
புதைந்துபட்ட போதும்
இயந்திரமாகிப் போகாமல்
கடலடியின்
ஈர இதயம் கொண்ட
இனிய மனிதனே
நல்ல தமிழ்க் கவிஞனே
ஒருநாளும் ஆறிப்போய்விடாத
ஆற்றல் விசையால்
பிறந்த மண்ணை வாரி எடுத்து
வான உச்சிக்கே ஏற்றிச் சென்று
வாசித்துக் காட்டிய
அணுசக்தியே
O
உன்
ஏவுகணைத் தேடல்களும்
அணுசக்திச் சோதனைகளும்
வல்லரசுக் கோட்டைகளையும்
வேரோடு ட்டிப் பார்த்துவிட்டன
O
அதோடு
அரை நூற்றாண்டிலேயே
அழுகிச் சிதைந்து
ஆணிவேரில் புற்றேறி
அருவருப்பாய்த் திரிந்துபோன
விடியல்கெட்ட நம் அரசியலை
அடியோடு ஒழித்துப் போட
ஓர்
ஏவுகணை செய்வாயா
O
கனலாகவே கருவான
கிராமத்துக் கதிரவனே
நீ பற்றியெரிந்த வெளிச்சத்தால்
மண்ணும் விண்ணும் இன்று
ஒரு
பிரகாச உற்சவத்தில்
O
சம்மதமே உன்மதம் என்று
சத்திய மனிதனாய் எழுந்துநிற்கும்
நம்பிக்கைப் பேரொளியே
இந்தியாவின்
ஒவ்வோர் இளைஞனும்
இன்று
உன் முகம் பார்த்தே
ஏங்கி நிற்கின்றான்
ஆயிரமாயிரம்
அப்துல் கலாம்களாய்
அவர்களை ஆக்கித் தருவாயா
O
மதங்களின் முதுகினில்
மரவட்டையாய்த் தொற்றிக்கொண்டு
அரசக் கரங்களே
அரிவாள்களை எடுத்துக் கொடுத்து
ஆள்வெட்ட ஆள்தேடும்
அவலம் இன்னும் நீள்கிறதே
அதை
அடியோடு பொசுக்கிப் போடும்
அணுகுண்டாய் நிற்பாயா
O
திட்டமெல்லாம் போட்டுவிட்டாய்
நான் கண்டு பூரிக்கிறேன்
உன் திசைகளெல்லாம்
தீச்சுடர்தான்
நான் கண்டு குதூகலிக்கிறேன்
தேனளக்கும் நம்பிக்கையை
நீ
வாரி வாரி வழங்குகின்றாய்
உன்
தீவிரமும் நானறிவேன்
நாளை எழுந்துநிற்கும்
இந்தியாவை
ஒரு கற்பூரச் சுடராய்க்
காட்டுகின்றாய்
O
கண்களின் கரைகளிலெல்லாம்
இன்று நான்
கண்ணீரே ஏந்துகின்றேன்
இனியேனும்
ஏற்றங்கள் காண்போமா
இல்லை
ஏமாற்றம் ஒன்றேதான்
கொள்வோமா
O
உனக்கொரு தோல்வியெனில்
அது உன் தோல்வியல்ல
தேம்பிக்கிடக்கும்
ஒரு நூறுகோடி மக்களின்
ஒட்டுமொத்தத் தோல்வி
அப்படியரு
தோல்வியைச் சொல்ல
நீ யன்றும் கோழையல்ல
நீ சோதித்த அணுகுண்டை
அழுகிய அரசியல் வாதிகளின்
இடுப்பிலேயே போட்டு
இழுத்து வரமாட்டாயா
நம் சுதந்திரத்தை
என்ற மனத்தெளிவோடு
நான் நிற்கிறேன்
O
துரோகக் கிருமிகளாய்
உன்னைச்
சூழ்ந்துவரும் சூழ்ச்சிகளை
நீ வென்றெடுக்க
நூறு கோடி நெஞ்சங்களும்
ஒன்றுபட்டே நிற்கின்றோம்
ஒரு
வேண்டுதலாய்த் தொழுகின்றோம்
O
மறவாதே ஐயனே
கொண்ட
கொள்கையின் தீட்சண்யதினின்று
என்றும் எதற்காகவும்
துளியும் பிறழாதே எங்களின்
பனிரெண்டாம்
குடியரசுத் தலைவனே

தமிழுக்கும், தமிழ் உலகத்தின் கவி பிரம்மாக்களுக்கும் வணக்கம். அன்புக்
கவிஞருக்கு வந்து சேர்ந்த வாழ்த்துக்களையும், பூமாலைகளையும்,
பரிசுகளையும். பொற்காசுகளையும், பண முடிச்சுகளையும் பத்திரமாகப்
பாதுகாக்கும் பணியினைச் செவ்வெனே மேடையின் ஓரத்தில் நின்று
செய்துவந்தேன். வாழ்த்துரைகள் வந்து சேர்ந்துவிட்டன தங்காய்.. வந்து
வாசித்துக் காட்டு என்று அண்ணன் ஆல்பர்ட் அழைக்க, இதோ... உங்கள்
முன்னிலையில் வாழ்த்துப்பாட வணக்கத்துடன் கற்பகம். இருந்தாலும் என்
சிந்தனையின் கவனம் சந்தக் கவிஞருக்காக குவிந்த கெளரவப் பரிசுகளை
பாதுகாத்துக் கொண்டுதான் இருக்கிறது.
அமெரிக்க மண்ணில் பட்டுச்செலை அணிந்து, மல்லிகைச் சரங்கள் சூடி, தங்க வளை
பூட்டி, அலங்காரம் செய்துகொள்ள ஒரு சந்தர்ப்பம் அமைந்ததே மாபெரும்
அதிர்ஷ்டம். கூடுதலாக மேடையில் பேசும் வாய்ப்பினையும் அளித்த தமிழுலக
மட்டுனர்களுக்கு எப்படி நன்றி சொல்வது. மிக்க நன்றி. இது போன்ற வெற்றி
விழா கண்டதில்லை. வாழ்க உங்கள் தமிழ்த் தொண்டு.
வேதங்கள் படித்து ஞானம் பெறுதல் வழக்கம். வேதமே நம் மத்தியில் நடமாடும்
பேறு, பெருமிதம் நமக்கு.
முதல் வாழ்த்து கவியோகி வேதம்.
அன்புடன் இதயம் - ஒரு பருந்துப் பார்வை
(யோகியார் வேதம்)
திண்ணையும், எழில்நிலாவும், தமிழ் உலகமும், அகத்தியர் இணையமும் இன்னும்
பிற தமிழ் ஏடுகளும் அச்சு முத்தம் கொடுத்து ஆதரித்த, இல்லை, அன்புடன்
அரவணைத்துக்கொண்ட என் அன்பர் 'புகாரி'யின் 'அன்புடன் இதயம்' கவிநூலை
வரிவிடாமல் படித்து மகிழ்ந்தேன்.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை. தேனில் எப்பழம்போட்டால் என்ன? இனிப்பும்,
உடலுக்குக் குணமும் தரும் அதுபோல் புகாரியின் வரிகள் யாவுமே மனத்திற்கு
இனிமை கூடிப் பரவுகிற பரவசமும், சமுதாயத்திற்கும், நாம் சார்ந்த தமிழ்
அன்னைக்கு ஒரு புது ஒட்டியாணமும் அணிவித்த மகிழ்ச்சியும் அவரது
அனைத்துப் பாடலிலும் கிடைக்கக் கண்டேன். தமிழையே அவர்
'வைரத்துள்
ஒளிர்கின்ற
கவிதை'
என்றல்லவோ சொல்கின்றார்.
நல்ல புனிதத்துள் நிமிர்கின்ற தீபத்தமிழை, அதனுள்போய் 'இளமை' கலந்த
சொற்களாகத் தன் பாட்டுப்பந்தலை வேய்கின்றார். 2-வது கவியில் அவர்
'நீயே
வலிய வந்து
இழுத்த தேரை
ஏன்
திராவகத் தீயில்
செலுத்தினாய்?'
என அவர் காதல் இழந்த ஒருகவிப்பறவையை நம் கண்முன் நிறுத்தும்போது இரு
கண்மாய்களும் துக்க நீர் சுமக்கின்றன.
நல்ல பதப்ரயோகம், புதிய சிந்தனை அவரின் சோகப் பாட்டில் கிட்டுகிறது.
அதுபோல் 'கலவரத்தில் உன் வாழ்வைக் கழிக்காதே' என அவர் இக்கால
இளைஞனுக்குச் சொல்லும்புத்திமதியில் நல்ல அறிவுரை மட்டுமன்று, அவன்
நன்மையே செய்து இச்சமுதாயத்தில் ஒரு சிறந்த வீரனாக வாழவேண்டுமே எனும்
கவலையும் தெரிகிறது.
அரிவாள்கள்
அறிவில்லாதவனுக்கே
வேண்டும்;'
பொருளாதார மேன்மை,
மனோதிடச் செல்வம்,
பேரறிவுப் பெரு நெருப்பு
போன்ற
கேடயங்கள் அல்லவோ
இளைஞனே
உனக்கு இன்று வேண்டும்!
என்னும் போது அவரது யதார்த்த ஆதங்கம் புரிகிறது.
மூட வெறிக்கு
முக்கியத்வம் தராதே
என ஆணையிடுகிறார். ஆகவே, இளைஞர்கள் கட்டாயம் இக்கவிதையை நெட்டுருச்
செய்தல் அவசியம்,.பல ஏடுகளும் இக்கவிதையைப் பிரசுரித்து அவர்களை நல்
வழிக்குத் திசை திருப்ப வேண்டும் என்பது என் ஆசை.
கனடா-வாங்கூவர் ஒருவசந்த தேவதை, ஒரு சொர்க்கம் என்று வரி அழகுகளால்
மயில்போல் தோகை விரித்திருக்கிறார். காண வேண்டும் என்ற துடிப்பை
என்னுள் விதைத்துவிட்டார்.
வேலை கிட்டவில்லை, பணம் கிடைக்கவில்லை என்று வெற்றுச்சோகத்தில் ஆழ்கிற
இக்க்கால இளைஞனை
'சோர்ந்துவிடாதே நீ,
நம்பிக்கை நெருப்பே
கண்களின்
வெற்றியின் சிரிப்பு;
கவலைகளின் வேர்களை
அறுத்து, தோழா!
கண்களின் அருவியைநிறுத்து!
என அவர் அவனை நிமிரத்தூண்டுகிறார்.
நல்ல தெம்புதரும் படைப்பு இது.
'சலவை செய்து
உன் அழுக்கைப் போக்கிவிடு;
சகலரும் வாழ
பூமியைப் பூக்கவிடு;
என்று மிக அற்புத வசந்த வரிகளால் (இவை பொன்னெழுத்துக்களால் எந்த
சலவைக்கல்லிலும் பொறிக்கப்படவேண்டியவை) போரை உடனேநிறுத்த அனைத்துத்
தேசங்களுக்கும் உத்தரவிடுகிற அழகே அழகு;
அடுத்து 'பஞ்ச பூதங்கள் பற்றியும் ஒவ்வொரு கவியாக பலத்த ஆய்வுக்
கண்ணோட்டத்துடன் விடுக்கிற சொற்கள் அனைத்தும் அழகோ அழகு;
குறிப்பாக'காற்று'-- கவியில்
காற்றில்மிதக்கும்
வாசனைதானே
சமையல் கலையைக்
கற்றுத்தந்தது;
நித்தமும் நாசிகள்
தொட்டு
கீதம் பாடுவதே
காற்றுதானே?
எனக் கேட்கும்போது 'உண்மையின் பரவசம் நம்மை நிமிரச் செய்கிறது;
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்; சிந்திய தேனில் எத்துளி இனிப்புத்துளி
எனக்கேட்பதுபோல் இருக்குமது.
நல்ல தமிழ் பேச மாட்டேன் என்கிறாயே..தமிழனே! என அவர் ஆதங்கப் படும்போதும்
(பக்கம்86,87) தமிழ் இணையம் பற்றி ஆச்சர்யக் கவிவரிகளால்
அலங்கரிக்கும்போதும், கண்ணதாசனை (நான் வழிபடும் ஒரு முக்கிய கவி அவர்)
அகோர ராகத்திற்கும்
அழகிய கவிபடைக்கும்
கவித்தலைவன்
எனக்கொண்டாடும்போதும் புகாரி எங்கோ ஒரு கவி-ஆநந்தச் சிகரத்தில்
நிற்பதாகப் படுகிறது எனக்கு.
இப்படி வார்த்தைச் சந்தனத்தால் பூசி, வாசிக்கின்ற அனைத்து நல்ல
தமிழரையும் மேனி புளகிக்கச்செய்யும் கவி புகாரி எனக்கு அந்நூலில்
(ரொம்ப யதார்த்தம்) மிகப் பிடித்த 'என் குடும்பம்' (இதுவே இன்றைய தமிழ்
நாட்டின் அவல நிலை)
கவியையும் தமிழுக்குத் தந்ததால் இவரை யான் என் இணையக் கரங்களால்
'சிந்தனைச் செல்வன் புகாரி' எனப் பட்டம அளித்து பாராட்டி மகிழ்கிறேன்.
அன்புடன் வாழ்த்துகிறேன்.
(கவி யோகியார்)
 |
|
| |
'எழில்
நிலா'வின் சிறப்புப்பக்கம் |
 |
|
|